த ஸ்டார் நாளேட்டின்மீது அரசின் நடவடிக்கை நியாயமற்றது

ஆங்கில நாளேடான த ஸ்டாரில் நிகழ்ந்த ஒரு தவற்றுக்காக அரசாங்கம் அதன் விரிவான அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்நாளேட்டிடம் கெடுபிடி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என சுயேச்சை இதழியல் மையம்(சிஐஜே) கேட்டுக்கொண்டிருக்கிறது.

“அமைச்சின் தலையீடும் ஆகஸ்ட் 12-இல் அச்செய்தித்தாள் வெளியிட்டிருந்த மன்னிப்பை அது நிராகரித்த விதமும் பொருத்தமற்ற செயலாகும். அது, அச்சக மற்றும் பிரசுரச் சட்டம்(பிபிபிஏ), 1984-இன்கீழ் அதற்குள்ள அளவற்ற அதிகாரத்தைப் பிரதிபலிக்கிறது.

“இந்தக் கொடூரச் சட்டத்தைக் கொண்டு, தற்செயலாக நிகழும் தவறுகளுக்காகக் கூட ஒரு செய்தித்தாளின் வெளியீட்டு உரிமத்தை  எளிதாகப் பறித்துக்கொள்ள முடியும்”, என அந்தச் செய்திஊடகக் கண்காணிப்பு அமைப்பு நேற்றுக் கூறிற்று.

த ஸ்டார், ஆகஸ்ட் 11-இல் “ரமலான் உணவுகள்” என்று வெளியிட்டிருந்த உணவுப் பட்டியலில் எப்படியோ பன்றி இறைச்சி கலந்த உணவுகளும் இடம்பெற்று விட்டன.

இதற்காக அந்நாளேடு கடந்த வெள்ளிக்கிழமை மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாலும்கூட மலாய் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசா அதனை ஏற்கவில்லை. அதை “இஸ்லாம்-எதிர்ப்பு” நாளேடு என முத்திரை குத்தி அதன் பிரதிகளைத் தீயிட்டுக் கொளுத்தியது.

அந்நாளேட்டின் விளக்கம் உள்துறை அமைச்சுக்கும் திருப்தியளிக்கவில்லை.அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், அதன் தலைமை செய்திஆசிரியரை வரவழைத்து தம் அதிருப்தியைத் தெரிவித்துக்கொண்டார்.

அதன்“பொறுப்பற்ற” பிரசுரத்தால் ஆத்திரமுற்றிருக்கும் முஸ்லிம்களை அமைதிப்படுத்த அந்நாளேடு கூடுதலாக ஏதாகிலும் செய்ய வேண்டும் என்று ஹிஷாமுடின் கூறினார்.

த ஸ்டார் ஆகஸ்ட் 17-இல், மீண்டுமொரு முறை மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தவறு நிகழ்ததற்கான சூழலையும் விளக்கியதுடன் அதற்குப் பொறுப்பான செய்தி ஆசிரியர் ஜோனி வோங்கையும் பணி இடைநீக்கம் செய்தது.

அந்த நாளேட்டுக்காக பரிந்து பேசிய சிஐஜே, சம்பந்தப்பட்ட தரப்புகள் உணர்ச்சிவயப்படாமல் இவ்விவகாரத்தை அணுக வேண்டும் என்று  கேட்டுக்கொண்டது.

“அச்சு ஊடகத்தை அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பிபிபிஏ-யை எவ்வளவு எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்கு வருந்தத்தக்க இச்சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு.அதற்காகவே, மக்களின் நலன்கருதி இச்சட்டம் அகற்றப்பட வேண்டும்”, என்றது கூறியது.