கிறிஸ்துவர்களை மரத்தடியில் வழிபாடு செய்ய வைப்பது மலேசியக் கலாச்சாரமல்ல

idrisகிறிஸ்துவ  மாணவர்களை  மரத்தடியில்  வழிபாடு செய்யச்  சொல்வதும்  மலாய், முஸ்லிம்  ஆடைகளை அணியுமாறு  கூறுவதும்  மலேசியக்  கலாச்சாரத்துக்கு  எதிரானது  என்கிறார்  இரண்டாவது  கல்வி  அமைச்சர்  இட்ரிஸ்  ஜோஸோ.

சாபா  நாளேடான  டெய்லி  எக்ஸ்பிரஸில், அந்தக்  கிழக்கு மலேசிய  மாநிலத்தில்  ஒரு  கல்லூரியின்  கிறிஸ்துவ  மாணவர்கள்  திறந்த  வெளியில்  வழிபாட்டை   வைத்துக்கொள்ள  கட்டாயப்படுத்தப்பட்டதாக  வெளிவந்துள்ள  செய்தி  பற்றி  அமைச்சர்  கருத்துரைத்தார்.

“இப்படியும் சில  நடக்கின்றன.  ஆனால்  அது  நம்  நாட்டுக்  கலாச்சாரமல்ல”,  என்று இட்ரிஸ்  குறிப்பிட்டதாக  த  ஸ்டார்  அறிவித்துள்ளது.

அவ்விவகாரத்தை  கல்வி  துணை  அமைச்சர்  மேரி  யாப்  கவனிப்பார்  என்றவர்  தெரிவித்தார்.

நாட்டில் அங்கொன்றும்  இங்கொன்றுமாக  நடக்கும்  இப்படிப்பட்ட  நிகழ்வுகளை (ஊடகங்கள்)  பெரிதுபடுத்திக்  காண்பிக்கும்போது  நாட்டில்  ஒற்றுமையே  இல்லாதது  போன்ற  தோற்றம்  உருவாகி  விடுகிறது  என்று  கூறிய  அவர்  செய்தித்தாள்கள்  இனங்களிடையே  ஒற்றுமையைக்  காண்பிக்கும்  செய்திகளுக்கு   முக்கியத்துவம்  கொடுக்க  வேண்டும்  என்றும் கேட்டுக்கொண்டார்.