மாட் சாபு மீது டிசம்பர் 19ம் தேதி விசாரணை

புக்கிட் கெப்போங் போலீஸ்காரர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் அவதூறு கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு மீதான விசாரணை டிசம்பர் 19 ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும்.

அந்தத் தேதிகளை இன்று பட்டர்வொர்த்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் நிர்ணயம் செய்தது.

ஏற்கனவே அந்த விசாரணைக்கு நீதிமன்றம் நிர்ணயம் செய்திருந்த டிசம்பர் 5 முதல் டிசம்பர் 9ம் தேதிகளில் அரசு தரப்பு வழக்குரைஞர்கள் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் மாற்றுத் தேதிகளை நிர்ணயம் செய்யுமாறு அரசு வழக்குரைஞர் லைலாவாத்தி அலி விண்ணப்பித்துக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி இக்மால் ஹிஷான் முகமட் தாஜுடின் புதிய தேதிகளை அறிவித்தார்.

1950ம் ஆண்டு ஜோகூரில் புக்கிட் கெப்போங் துயரச் சம்பவத்தின் போது தாக்குதலுக்கு இலக்கான போலீஸ்காரர்கள், அவர்களுடைய குடும்பங்கள் மீது அவதூறு கூறியதாக குற்றவியல் சட்டத்தின் 500வது பிரிவின் கீழ் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டை மாட் சாபு என்றும் அழைக்கப்படும் 57 வயதான முகமட் செப்டம்பர் 21ம் தேதி மறுத்து விசாரணை கோரினார்.

ஆகஸ்ட் 21ம் தேதி தாசெக் குளுகோர், பாடாங் மெனோராவில் உள்ள பாஸ் கல்வி மய்யத்தில் அமைந்துள்ள பாலர் பள்ளிக்கு முன்பு அந்தக் குற்றத்தைப் புரிந்ததாக மாட் சாபு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அதே இடத்தில் அதே நேரத்தில் கான்ஸ்டபிள்களான மரின் அபு பாக்கார் டாவுட், ஜாபார் ஹசான், யூசோப் ரோனோ மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது அவதூறு கூறியதாக மாற்றுக் குற்றச்சாட்டும் மாட் சாபு மீது சுமத்தப்பட்டுள்ளது.

அந்த கான்ஸ்டபிள்களுடைய குடும்ப உறுப்பினர்களான ஜமிலா அபு பாக்கார், அஸ்லாஸ் ஜாபார், நாசிர் யூசோப் ஆகியோர் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து மாட் சாபு மீது அந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பெர்னாமா

TAGS: