எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் சொந்த அரசியல் ஆதாயத்துக்காக மனித உரிமைப் பிரச்னைகளை பயன்படுத்தி வருவதாக முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார்.
மக்களைக் காப்பாற்றுவதற்குப் பதில் அரசியல் நோக்கங்களுக்காக ‘மனித உரிமை அலை’ பயன்படுத்தப்படுவது மீது சில தரப்புக்கள் தெரிவித்துள்ள கவலையைத் தாம் ஒப்புக் கொள்வதாக அவர் சொன்னார்.
“..நாங்கள் மனித உரிமைகளை மதிக்கிறோம். அவை நமது ஆற்றலுக்கு உட்பட்டு அமலாக்கப்பட வேண்டும்,” என மகாதீர் இன்று சொன்னார்.
“ஆண்கள் ஆண்களையும் பெண்கள் பெண்களையும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் தீவிரமான மனித உரிமைகளைப் பின்பற்றும் மேற்கத்திய பாணியைப் நாம் பின் தொடருவது முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்,” என்றார் அவர்.
மலேசியாவைப் போன்ற வளரும், பல இன, பல சமய நாடுகள், மேற்கத்திய நாடுகளைப் போல் அல்ல என மகாதீர் சொன்னார்.
“மேற்கத்திய நாடுகள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் போது நம்முடன் ஒப்பிடும் போது மோசமான மனித உரிமை அத்துமீறல்களில் ஈடுபடுகின்றன. எடுத்துக் காட்டுக்கு குவாண்டானமோ விரிகுடாவில் நடப்பதைக் கூறலாம்.”
“விசாரணை இல்லாமல் தடுத்து வைப்பதற்கு அமெரிக்காவில் சட்டங்கள் இல்லை. குவாண்டானமோ-வில் 11 ஆண்டுகள் முடிந்து விட்டன. அது ஏன் கைதிகளை விடுவிக்கவில்லை ?”
மக்களை கைது செய்வதற்கு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்களை மலேசியா கொண்டுள்ளது. அமெரிக்காவில் அத்தகைய சட்டங்கள் இல்லை. ஆனால் அது, 11 ஆண்டுகளாக கைதிகளை தடுத்து வைத்துக் கொண்டு சித்தரவதை செய்து வருகிறது என்றார் மகாதீர்.
“கைதிகளை சித்தரவதை செய்ய அதன் அரசாங்கம் அனுமதிக்கிறது. எங்கள் மனித உரிமை விவகாரம் மீது கவனம் செலுத்த வேண்டாம். நீங்கள் குறை கூற விரும்பினால் மனித உரிமை அத்துமீறல்களுக்காக பாரக் ஒபாமாவை குறை கூறுங்கள்.”
மலேசியா, தனக்கு பொருத்தமான விஷயங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மேற்கத்திய நாடுகள் கடைப்பிடிக்கிற அனைத்தையும் நாம் பின்பற்ற வேண்டியதில்லை என அவர் வலியுறுத்தினார்.
நாட்டுக்குத் தீங்கு செய்வதற்கு சிலர் மனித உரிமை விவகாரங்களை பயன்படுத்தி வருவதாக நேற்று பெர்க்காசாவின் இரண்டாவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹிம் நூர் கூறியிருந்தார்.