காணாமல்போன ரிம2.6 பில்லியன் பற்றி இணையத்தில் உலா வரும் பாடல்

songபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  வங்கிக்  கணக்கில்  செலுத்தப்பட்ட  ரிம2.6 பில்லியன் விவகாரத்துக்குத்  தீர்வு  காணப்படாதது  குறித்து  இணையத்தில்  பலர்  பல  மாதிரி  தங்கள்  ஆத்திரத்தை  வெளியிட்டிருக்கிறார்கள். பாடகர்  அமிருடின்  ஹிஸாடின்  பாடல்வழியே  தன்  மனக்குமுறலை  வெளிப்படுத்தி  இருக்கிறார்.

ரிம2.6 பில்லியனை,  தன் உலகை  இருளாக்கிய ‘காணாமல்போன  நட்சத்திரங்கள்’ என்று  வருணித்து  அவர்  பாடிய  பாடல்  நேற்று  பகலில்  பதிவேற்றம்  செய்யப்பட்டு  இணையத்தில்  வேகமாக  பரவி  வருகிறது.

Mana Hilang 2.6 Bintang ( 2.6 நட்சத்திரங்கள்  மறைந்த  மாயம்  என்ன)  என்ற  தலைப்பைக்  கொண்ட  அவரது  இசை  காணொளி  நேற்றிரவு 8மணிவரை  80,000  தடவை  பார்க்கப்பட்டிருக்கிறது.

பாடலில்  அமிருடின்,  மாநகரில்  எதிர்நோக்கும்  தொல்லைகளை  விவரிக்கிறார்.

டோல் கட்டணம்,  பெட்ரோல்,  மின்சாரம்,  உணவு  முதலியவை  விலை  உயர்ந்து  போனதை  எண்ணி  அங்கலாய்க்கிறார். ‘ஆனாலும்,  பரவாயில்லை  பிரிம்  வரும்  உதவி  செய்யும்  எனக்  காத்திருப்பேன்’  என்கிறார்.

இருள் இருந்தால் ஒளியும்  இருக்கும்   என்று  தனக்குத்  தானே  ஆறுதலும்  கூறிக்  கொள்கிறார்.

அது  உண்மை  என்றால்  ஏன்  எல்லோருக்கும்  இந்த  ‘மனச்  சோர்வு’  என்ற  கேள்வியும்  கேட்கிறார்.  கேள்வியுடன் பாடல்  முடிகிறது.