அரசாங்கத்தைக் கவிழ்க்கத் திட்டம்: ஆதாரம் உண்டு

proofஅரசாங்கத்தைக்  கவிழ்க்கும்  திட்டம்  தொடர்பில்  புத்ரா  ஜெயாவுக்கு  ஆதாரங்கள்  கிடைத்திருப்பதாக  உள்துறை  அமைச்சர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  கூறினார்.

ஆதாரங்கள்  கிடைத்திருந்தாலும்  அவற்றை  வெளியிடுவதற்கில்லை  என்றாரவர்.

“பாதுகாப்புக்  காரணங்களால்  ஆதாரங்களை  வெளியிட  முடியாது. போலீசார்  மேலும்  தகவல்களைத்  திரட்டி  வருகிறார்கள்”, என்று  சொன்ன  ஜாஹிட்  எந்தத்  தரப்பையும்  பெயர்  குறிப்பிடவில்லை.

“மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட  சட்டப்படியான  அரசாங்கத்தை  ஜனநாயகமற்ற  வழிகளில்  கவிழ்க்க  முயல்வதை  அரசாங்கம்  கடுமையானதாகக்  கருதுகிறது”, என்று  அவர்  சொன்னார்.

நஸ்ருடின் ஹசான் (பாஸ்- தெமர்லோ) கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கிய  பதிலில்  ஜாஹிட்  அவ்வாறு  கூறினார்.

அரசாங்கத்தைக்  கவிழ்க்கும்  திட்டம்  இருப்பதற்கு  ஆதாரங்களைக்  காண்பிக்குமாறு  நஸ்ருடின்  கேட்டார்.

பிரதமரைப்  பதவி  விலகக்  கோரி  நடத்தப்பட்ட  பெர்சே 4  பேரணி,  1எம்டிபி,  பிரதமரின்  கணக்கில்  செலுத்தப்பட்ட  ரிம2.6 பில்லியன்  ஆகியவற்றைச்  சர்ச்சையாக்கியது  ஆகியவற்றை  அரசைக் கவிழ்க்கும்  முயற்சிகள்  எனப்  பிரதமரே  குறிப்பிட்டிருக்கிறார்.

அம்னோ  தலைவர்  ஒருவர்  எதிரணி  எம்பிகளுடன்  சேர்ந்து  புத்ரா  ஜெயாவைக்  கவிழ்க்க  முயற்சி  மேற்கொண்டார்  எனவும்  அம்னோ  உதவித்  தலைவரான  ஜாஹிட்  தெரிவித்தார்.

பின்னர்  தவற்றை  உணர்ந்தே  அந்தத்  தலைவரே  நஜிப்பை நேரில்  சென்று  கண்டார்  என்றாரவர்.