மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் ஆனால் குடியுரிமை இல்லை

bornஅவர்கள்  அவர்களின்  பெற்றோரையும்  தாத்தா- பாட்டிகளையும்  போலவே  மலேசியாவில்   பிறந்து  வளர்ந்தவர்கள்.

மலேசியாதான்  அவர்களின் நாடு. ஆனால்,  அதை  நிறுவ  ஆவணங்கள்  ஏதுமில்லை  அதனால்  அவர்கள்  குடிமக்களாகக்  கருதப்படுவதில்லை.

அதிகாரத்துவ  ஆவணங்களின்றி  இச்சிறார்கள் குடிமக்களின்  உரிமைகளான  கல்வி,  வேலைவாய்ப்பு,  சுகாதாரப் பராமரிப்பு  போன்றவற்றை  அனுபவிக்க  முடிவதில்லை.

இப்படிப்பட்ட பல  கண்ணீர்  கதைகள்  நேற்று  கோலாலும்பூரில்  ஐக்கிய நாடுகள்  நிறுவனத்தின்  அகதிகளுக்கான  உயர்  ஆணையம்  நடத்திய   நாடற்ற  சிறார்கள்  பற்றிய  கண்காட்சியில்  எடுத்துரைக்கப்பட்டன.

தட்ஷாயினி  என்ற  பெண், எஸ்பிஎம்  தேர்வு  எழுத  இரண்டு  வாரங்கள்  இருந்தபோது  பள்ளியிலிருந்து  நிறுத்தப்பட்டார்.

அவர்  தனியார்  மாணவராகத்தான்  அத்தேர்வு  எழுத  முடியும்  என்றும்  அதற்காக  ரிம250  கட்டணம்  செலுத்த  வேண்டும்  என்றும்  கூறப்பட்டது.   அவரிடம்  அவரை மலேசியக்  குடிமகளாகக்  காண்பிக்கும்  அடையாள  ஆவணம்  எதுவும்  இல்லாததே  இதற்குக்  காரணம்.  ஆனால்  கட்டணம்  கொடுக்க  அவரால்  இயலவில்லை.
“என் பிறப்புச்  சான்றிதழில்  ‘புக்கான்  வர்கா  நெகரா(குடியுரிமை  இல்லாதவர்) எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது. என்  தாயார் அதை  மாற்ற  முயன்றார்.  முடியவில்லை. ஏனென்று  எனக்குத்  தெரியவில்லை”, என்றார்.

எப்படியோ  எஸ்பிஎம்  தேர்வு  எழுதி  விட்டார். ஆனால், அடையாள  ஆவணங்கள்  இல்லாததால்   அவருக்கு  வேலை  கிடைக்கவில்லை.

இப்போது  மனிதவள  மேம்பாடு  மீதான  என்ஜிஓ (DHRRA) மூலமாக  அடையாள ஆவணங்களைப்  பெற  முடியும்  என்று  நம்பிக்  கொண்டிருக்கிறார்.

“டிஎச்ஆர்ஆர்ஏ  எனக்கு  அடையாள  ஆவணங்கள்  பெற  உதவுமானால்  நான்  மற்ற  நாடற்ற  மக்களுக்கு  கண்டிப்பாக  உதவுவேன்.

“அனைவருக்கும்  அடையாளம்  வேண்டும்”,  என  தக்‌ஷாயனி  கூறினார்.

அக்கண்காட்சியில்  பேசிய  லட்சுமி  என்ற  பெண்ணுக்கும்  மலேசிய  அடையாள  ஆவணங்கள்  இல்லை.

ஆனால் டிஎச்ஆர்ஆர்ஏ-இன்  உதவியுடன்  அவருக்கு  அண்மையில்  அடையாள  ஆவணங்கள்  கிடைத்தன.

டிஎச்ஆர்ஆர்ஏ நிர்வாக இயக்குனர்  நந்தினி  ராமுலு  தனது  அமைப்பு  12,000- த்துக்கு  மேற்பட்ட  நாடற்றவர்களுக்கு  உதவி இருப்பதாக  தெரிவித்தார். இப்போதுகூட  4,500  பேரின்  பிரச்னைகளை  அதிகாரிகளின்  கவனத்துக்குக்  கொண்டு  சென்றிருப்பதாகக்  கூறினார்.

அவற்றைப்  பார்த்து  முடிக்க  இரண்டிலிருந்து  மூன்றாண்டுகள்  ஆகலாம்  என்றார்.