பக்காத்தான் ரக்யாட்டைப் பதிவு செய்ய புதிதாக விண்ணப்பம் செய்யப்படவில்லை என்று சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) கூறியிருப்பதை அக்கூட்டணி மறுத்துள்ளது.
சொல்லப்போனால், மார்ச் மாதத்திலிருந்து அது பதிவகத்தை விரட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்று பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியோன் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பரில், பக்காத்தான் இடைக்காலத் தலைவர் பதவியை சைட் இப்ராகிம் துறந்தபின்னர், அதன் மார்ச் மாதம் அவசரக்கூட்டம்(இஜிஎம்) நடத்தி அதில் பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் கமருடின் ஜாஃபார் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சைட் வெளியானதை அடுத்து பக்காத்தான் தன்னைப் பதிந்துகொள்ள புதிய விண்ணப்பம் செய்யவில்லை என்று ஆர்ஓஎஸ் தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மானை மேற்கோள்காட்டி நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸில் வெளிவந்த செய்தி குறித்து கருத்துரைத்தபோது சைபுடின் இவ்வாறு தெரிவித்தார்.
“இஜிஎம்-மில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்..அதன்பின் புதிய மாற்றங்களுடன் விண்ணப்பத்தைச் சமர்பிக்க ஆர்ஓஎஸ் தலைமை உதவி இயக்குனருடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம்.
“ஆனால், ஆர்ஓஎஸ், சைட் பிகேஆரில் ஒரு உறுப்பினராக இல்லை என்றபோதிலும் அவர் ஏற்கனவே செய்திருந்த விண்ணப்பத்தின்மீது இன்னும் முடிவு எடுக்கப்படாமலிருப்பதைச் சுட்டிக்காண்பித்து புதிய விண்ணப்பத்தை ஏற்க மறுத்தது”, என்று மாச்சாங் எம்பியுமான சைபுடின் கூறினார்.
மார்ச் மாதத்திலிருந்து மூன்று நான்கு வாரங்களுக்கு ஒரு தடவை ஆர்ஓஎஸ்ஸுடன் தொடர்புகொண்டு விண்ணப்பத்தின் நிலை பற்றி அறிய முயன்று வந்திருப்பதாகவும் ஆனால் பயனில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“அப்படியிருக்க, புதிய விண்ணப்பம் தாக்கல் செய்யவில்லை அதனால் பக்காத்தான் ஒரு கட்சியாக பதிவு செய்யப்படவில்லை என்று ஆர்ஓஎஸ் தலைவர் சொல்லியிருப்பது வியப்பைத் தருகிறது…அப்படியானால், அப்துல் ரஹ்மான் ஒத்மான் தன் துறையில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலிருக்கிறார் என்றுதான் பொருள்படுகிறது”. சைபுடின் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
கமருடின் ஆர்ஓஎஸ் அதிகாரியைச் சந்தித்தபோது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களையும் சேர்த்தே சமர்பித்தார்.
“எல்லாம் முறைப்படி செய்திருப்பதால் எங்கள் விண்ணப்பம் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை அப்துல் ரஹ்மான்தான் விளக்க வேண்டும் ” என்றாரவர்.
இடைக்காலக் குழு தொடர்ந்து ஆர்ஓஎஸ்ஸைத் தொடர்புகொண்டு இவ்விவகாரத்துக்குத் தீர்வுகாண முயலும் என்றும் சைபிடின் குறிப்பிட்டார். சாதகமான பதில் இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பக்காத்தான் தலைமை முடிவு செய்யும்.
இதனிடையே அச்செய்தியாளர் கூட்டத்தில் இருந்த டிஏபி-இன் அந்தோனி லோக், முன்னர் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக செயலகத்துக்குக் கடிதம் எதுவும் வரவில்லை என்றார்.
“எந்தவொரு அமைப்பிலும் ஒருவர் மட்டுமே அதன் பிரதிநிதியாக இருப்பதில்லை. பக்காத்தான் என்பது சைட் இப்ராகிம் அல்ல.அதேபோல் சைட் இப்ராகிம்தான் பக்காத்தான் என்பதுமில்லை.
“சைட் பிகேஆரிலிருந்து விலகிச் சென்று விட்டார். அது அவருடைய பிரச்னை. அதற்காக பிகேஆரும் கலைந்துபோனதாக அர்த்தமாகுமா?” என்றவர் வினவினார். ஆர்ஓஎஸ் இரட்டைப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் அவர் சாடினார்.
“நாங்கள் ஈராண்டுகளாக பதிவுசெய்ய முயன்று வருகிறோம்.ஆனால், பிகேஆரைவிட்டு வெளியேறி சைட் அமைத்த பார்டி கித்தா இரண்டே வாரங்களில் பதிவுசெய்யப்பட்டது.
“பக்காத்தான் ரக்யாட், பாரிசான் நேசனலுக்கு போட்டியாக வந்துவிடும் என்ற பயம் ஆர்ஓஎஸ்ஸுக்கு….பதிவு இல்லையென்றால் அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் பெயரில் வேட்பாளர்களைக் களம் இறக்கமுடியாது பாருங்கள்”, என்று லோக் கூறினார்.