மாட் சாபு தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்ய உத்துசான் விண்ணப்பம்

புக்கிட் கெப்போங் கம்யூனிஸ்ட் விவகாரம் மீது வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றின் தொடர்பில் பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு தொடுத்துள்ள வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உத்துசான் குழுமத்தின் தலைமை ஆசிரியரும் உத்துசாம் மிலாயு (மலேசியா) சென் பெர்ஹாட்டும் செய்து கொண்டுள்ள விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நவம்பர் 23ம் தேதி செவிமடுக்கும்.

அந்த வழக்கு நிர்வாகத்துக்காக அந்த வழக்கு இன்று கொண்டு வரப்பட்ட போது நீதிபதி ஜான் லூயிஸ் ஒ ஹாரா தமது அலுவலகத்தில் அந்தத் தேதியை நிர்ணயம் செய்தார். அந்த வழக்கு ஜான் லூயிஸ் ஒ ஹாரா முன்னிலையில் விசாரணைக்கு வரும்.

மாட் சாபு என்றும் அழைக்கப்படும் முகமட் சார்பில் வழக்குரைஞர் அஸ்ஹானா முகமட் கைருதின் ஆஜரான வேளையில் உத்துசான் குழுமத் தலைமை ஆசிரியர் டத்தோ அப்துல் அஜிஸ் இஷாக், உத்துசான் மிலாயு ஆகியோரை முகமட் ஹாபாரிஸாம் ஹருண் பிரதிநிதித்தார்.

மாட் சாபு தொடுத்துள்ள வழக்கு அற்பத்தனமானது, வெறுப்பூட்டுவது, வெட்கக் கேடானது, நீதிமன்ற நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்துவது என்ற காரணங்களின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என அக்டோபர் 27ம் தேதி தாக்கல் செய்த விண்ணப்பத்தில் அப்துல் அஜிஸும் உத்துசான் மிலாயுவும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இரண்டு பிரதிவாதிகளும் தீய நோக்கத்துடன் ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி ஒரு கட்டுரையையும் அதற்கு அடுத்த நாள் அவதூறான அம்சங்களைக் கொண்ட இரண்டு கட்டுரைகளையும் வெளியிட்டதாக கூறி 57 வயதான முகமட் செப்டம்பர் மாதம் 14ம் தேதி வழக்குத் தொடுத்தார்.

அந்தக் கட்டுரைகள் ஜோகூரில் உள்ள புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட கம்யூனிஸ்ட் தாக்குதல் மீதான பிரச்னை சம்பந்தப்பட்டவை என்றும் அவர் கூறிக் கொண்டார்.

TAGS: