நேற்று பினாங்கு சட்டமன்ற வளாகம் வந்த நால்வர், திங்கள்கிழமை முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிராக நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்தது அம்னோ அல்ல என்று அறிவித்தனர்.
தங்களை பாஸ் மற்றும் டிஏபி உறுப்பினர்கள் என்று பிரகடனப்படுத்திக்கொண்ட அந்நால்வரையும் அம்னோவின் தெலுக் பாஹாங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஹில்மி யஹ்யா எதிர்கொண்டு வரவேற்றார்.
திங்கள்கிழமை மஞ்சள்நிற டி-சட்டை அணிந்த 200-க்கு மேற்பட்ட மாட் ரெம்பிட்டுகள் கலந்துகொண்ட பேரணிக்கு அம்னோதான் ஏற்பாடு செய்தது என்று கூறப்படுவதை மறுப்பதற்காக தாங்கள் அங்கு வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.அப்பேரணியில் ‘எல்ஜிஇ(லிம் குவான் எங்) இனவாதி’, ‘பினாங்கைக் காப்பாற்றுங்கள்’ என்ற முழக்கங்கள் இடம்பெற்றதுடன் மோட்டார் சைக்கிள் பந்தயத்துக்கு ஒரு பந்தயத் திடலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் அம்னோ கட்சியினர் மட்டுமல்ல, பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அதில் இடம்பெற்றிருந்தனர் என்று அந்நால்வரின் பேச்சாளர் ரசாலி இஸ்மாயில், 53, கூறினார்.
தாம் தெலும் கும்பார் பெர்துபோஹான் இஸ்லாம் காபோங்கான் அமல் (பெர்3) அமைப்பின் தலைவர் என்று தெரிவித்த ரசாலி, மற்ற மூவரும் பக்காத்தான் ரக்யாட் ஆட்கள் என்றார்.
‘பேரணியில் கலந்துகொள்ள பணம் கொடுக்கப்படவில்லை’
“திங்கள்கிழமை குழப்பம் செய்வதற்காக நாங்கள் வரவில்லை. ஒரு பந்தய திடல் கட்ட வேண்டும் என்று கோரும் மகஜர் ஒன்றை முதலமைச்சரிடம் கொடுக்கவே வந்தோம். ஆனால், அவர் அதை ஏற்க மறுத்தார்”, என்று ரசாலி குறிப்பிட்டார்.
“இன்று நாங்கள் வந்தது விசயத்தைத் தெளிவுபடுத்தத்தான். நாங்கள் டிஏபி, பாஸ், பிகேஆர் உள்பட பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். பேரணியில் கலந்துகொள்ள அம்னோ உள்ளிட்ட எந்தக் கட்சியும் எங்களுக்குப் பணம் கொடுக்கவில்லை,”
நால்வரில் இன்னொருவரான முகம்மட் சைபுல்லா இஸ்மாயில்.38, தாம் பாஸ் உறுப்பினர் என்றார்.
நேற்று, மொத்தம் 15 பேர் மோட்டார் சைக்கிள்களில் சட்டமன்றத்துக்கு வந்தனர். ஆனால், நால்வர் மட்டுமே அதன் வளாகத்துக்குள் ஹில்மியைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.
நால்வரில் ஒருவரான லீ பூன் ஹின் (இடம்),36, தாம் டிஏபி உறுப்பினர் என்றும் பினாங்கில் மாட் ரெம்பிட்டுகளுக்கென்று பந்தயத் திடல் கட்டித்தர வேண்டும் என்று மாநில அரசைக் கேட்டுக்கொள்ளவே பேரணியில் கலந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார்.
“பந்தயத் திடல் மட்டுமே எங்களுக்கு வேண்டும். அது, மாட் ரெம்பிட்டுகளினால் உண்டாகும் சமூகப் பிரச்னைகளைக் குறைக்கும். பேரணியை ஏற்பாடு செய்தது அம்னோதான் என்று கூறி ,மாநில அரசு பழியை அம்னோமீது போடக்கூடாது”, என்று கூறிய லீ, இவ்வாண்டில்தான் டிஏபி-இல் சேர்ந்ததாகக் கூறினார்.
நாலாவது நபரான அமீர் ஹம்சா,39, தாமும் தெலுக் கும்பாரைச் சேர்ந்தவரே என்று கூறினார். அவர் 2008 ஜூன் மாதம் பாஸில் உறுப்பினரானார்.
இந்நால்வரின் கூற்றிலிருந்து மோட்டார் சைக்கிள் பேரணியை ஏற்பாடு செய்தது அம்னோ அல்ல என்று தாம் ஏற்கனவே கூறியது உண்மைதான் என்பது நிரூபணமாகியுள்ளதாக ஹில்மி குறிப்பிட்டார்.
இதை மனத்தில் வைத்து இனியாகிலும் மனம்போன போக்கில் பேசுவதை மாநில அரசு நிறுத்துக்கொள்ள வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.
“அவர்கள் சமூகப் பணிகளைச் செய்து வரும் என்ஜிஓ(அரசுசாரா அமைப்புகளின்) உறுப்பினர்கள். எனவே, அம்னோதான் (அப்பேரணிக்கு ஏற்பாடு செய்தது என்று) பழி போட வேண்டாம்”, என்று ஹில்மி கூறினார்.
பாஸ் உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் உண்மையில் பாஸ் உறுப்பினர்கள்தாமா என்பதை ஆராயப்போவதாக மாநில பாஸ் ஆணையர் சாலே மான் கூறினார்.
“மாட் ரெம்பிட் நடவடிக்கைகள் தொல்லை தரக்கூடியவை, ஆபத்தானவையும்கூட.அதனால் பாஸ் உறுப்பினர்கள் அவற்றில் பங்கேற்பதை பாஸ் கொள்கை அளவில் ஆதரிப்பதில்லை”, என்றாரவர்.