அம்னோவிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் சுங்கை ரபாட் சட்டமன்ற உறுப்பினர் ஹமிடா ஒஸ்மான் எதிர்வரும் கோலா கங்சார் இடைத் தேர்தலில் போட்டியிடுவாரா மாட்டாரா என்பது இன்னும் விடைதெரியாத கேள்வியாகவே இருக்கிறது.
ஆனாலும், நடப்பு அரசியல் சூழலில் எதுவும் சாத்தியமே என்று அம்னோ கோப்பெங் தொகுதி முன்னாள் தலைவருமான ஹமிடா ஒஸ்மான் தெரிவித்ததாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.
அதே வேளை பிஎன் இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவது எளிதல்ல என்றும் அவர் ஆருடம் கூறினார். ஏனென்றால், பிஎன் சரியான வேட்பாளரைக் களமிறக்கவில்லையாம்.
“வெளியில் போய்க் கேட்டால்(பரப்புரை செய்தால்)கூட மக்கள் வாக்களிப்பது சந்தேகமே, போகாமலே இருந்தால் எப்படி?
“என்னைப் பொறுத்தவரை, தொழில்நுட்ப காலத்தில் நாம் வாழந்தாலும் வேட்பாளர் மக்களைச் சந்தித்து அவர்களிடம் தங்களின் திட்டங்களையும் அணுகுமுறைகளையும் விளக்கிட வேண்டும்”. துக்கம் அனுசரிக்கும் அம்னோ வேட்பாளரால் வெளியில் சென்று பரப்புரை செய்ய இயலாது என்பதைத்தான் அவ்வாறு கூறினார்.
பிஎன், கடந்த காலஞ்சென்ற வான் கையரில் அன்வாரின் மனைவி மஸ்துரா முகம்மட் யாஸிட்டை கோலா கங்சார் இடைத் தேர்தலுக்கான தனது வேட்பாளராக அறிவித்தது.
பாஸ் அதன் வேட்பாளராக நஜிஹாதுஸ்ஸலேஹா அஹ்மட்டைக் களமிறக்கியுள்ளது.
அமனா கட்சி மலேசிய தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் (Universiti Teknologi Malaysia-UTM) முன்னாள் பேராசிரியரான டாக்டர் அகமட் தெர்மிசி ரம்லியை எதிர்க்கட்சிக் கூட்டணி பக்கத்தான் ஹாராபான் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
ஆக, இதுவரையிலும் கோலா கங்சாரில் மும்முனைப் போட்டிதான். ஆனால், அம்னோ அடிநிலை உறுப்பினர் சைட் ரோஸ்லி சைட் ஹர்மான் ஜமாலுல்லாயில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப்போவதாக ஏற்கனவே கோடி காட்டியுள்ளார்.
கோலா கங்சார், சுங்கை புசார் இடைத் தேர்தல்களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் வரும் ஞாயிற்றுக்கிழமை. வாக்களிப்பு நாள் ஜூன் 18.
“இந்தியனையும் பாம்பையும் கண்டால், முதலில் இந்தியனை அடித்துக் கொல்லுங்கள்” என பேரா சட்டமன்றத்தில், கோஷம் போட்டவர் இந்த அம்னோ பெண்மணி. அவ்வமயம் அம்னோவின் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். அம்னோவைச் சேர்ந்தவர்கள் எப்படிப் பட்டவர்கள் என நினைவுறுத்தவே இதனை இங்கே சொல்கிறேன். இத்தகைய அம்னோவின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்யப் போகிறார்களாம், செத்தப் பிணங்களான ம.இ.கா.வினர்.