“பொதுத் தேர்தலுக்குமுன் தேர்தல் சீர்திருத்தங்கள் திருப்திகரமாக செய்து முடிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறியவர், பெரியவர் என அனைவரும் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும்.”
தேர்தல் சீர்திருத்தங்கள் இல்லையேல் பொதுத்தேர்தலைத் தடுக்கப் போவதாக மருட்டல்
பெண்டர்: இந்நாட்டில் சமூக அமைப்புகள் (சிஎஸ்ஓ) பல்லில்லாப் புலிகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
ஜனநாயக நாட்டில் சிஎஸ்ஓ-க்கள் கூடுதலாகப் பங்காற்ற வேண்டும். சத்தம் மட்டும் பெரிதாக இருப்பது போதாது. அது, சுவரில் பட்டுத்தெரிக்கும் எதிரொலியாய், வெறுமனே திரும்பி வருவதால் பயனேதும் இல்லை.
இப்போதுதான் நம் சிஎஸ்ஓ-க்கள் ஆட்சியாளர்களை எதிர்த்துப் பேசுவதில் சற்றுத் துணிச்சலைக் காட்டத் தொடங்கியுள்ளன. சோலிடேரிடி அனாக் மூடா மலேசியா(எஸ்ஏஎம்எம்), மலேசியன் சிவில் லிபர்டிஸ் மூவ்மெண்ட்(எம்சிஎல்எம்) போன்ற சிஎஸ்ஓ-க்களிடம் அப்படிப்பட்ட துணிச்சலைப் பார்க்கிறோம்.
அவர்களின் முயற்சியால் நல்லது நடக்க வேண்டும். மக்கள் எஸ்ஏஎம்எம்-முக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பது உறுதி. பெர்சே 3.0-க்குத் தேவை இருக்கிறது.
பேராசைகொண்டவன்: நாம் புத்திசாலித்தனமாக ஒவ்வொரு நகரிலும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் ஒன்றுசேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும்.
ஜூலை 9-இல், பல்லாயிரக்கணக்கானவர் தலைநகருக்குள் நுழைய முடியாதபடி தடுத்து நிறுத்தப்பட்டனர். எனவே, வெளியூர்களில் உள்ளவர்கள் அவரவர் ஊர்களிலேயே பேரணிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நாட்டுக்கும் மக்களுக்கும் இழைக்கப்பட்ட தவறுகளைத் திருத்த காந்தி நடத்தியதைப் போன்ற ஊர்வலத்தை அமைதியாக ஆனால் மன உறுதியுடன் நடத்திட வேண்டும்.
பொதுத் தேர்தலுக்குமுன் தேர்தல் சீர்திருத்தங்கள் திருப்திகரமாக செய்து முடிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறியவர், பெரியவர் என அனைவரும் அதில் கலந்துகொள்ள வேண்டும்.
அலுத்துப்போனவன்: எஸ்ஏஎம்எம் தலைவர் ச்சேகு பார்ட் (பட்ருல் ஹிஷாம் ஷாஹாரின்) மக்கள் பொறுமை இழந்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார். அது, மக்களின் பேச்சாளர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் ஒருவர் தன்னைத்தானே திருப்திப்படுத்திக்கொள்ள பேசிய பேச்சாக தெரிகிறது.
மக்கள் எங்களை ஆதரிக்கிறார்கள், நாடே எங்கள் பின்னால் நிற்கிறது என்றெல்லாம் பீற்றிக்கொள்வது அரசியல்வாதிகளின் வழக்கம்.
மக்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டால்தவிர மக்கள் எதை அல்லது யாரை ஆதரிக்கிறார்கள் என்பதை உறுதியாக சொல்லிட முடியாது.
பெயரிலி_3e86: பிஎன் மோசடிமூலமாகத்தான் 13வது பொதுத்தேர்தலில் வெற்றிபெற முடியும். அதற்கான ஏற்பாடுகளை அது செய்யத் தொடங்கியும் விட்டது.ஆயிரக்கணக்கான கள்ளக் குடியேறிகள், குடியுரிமை வழங்கப்பட்டு வாக்காளர்கள் ஆக்கப்பட்டுள்ளனர்.
என்றாலும், பிஎன்னை ஆட்சியை விட்டு இறக்க முடியும். அதற்கு மதில்மேல் பூனையாக இருக்கும் வாக்காளர்களை நம் பக்கம் இழுக்க வேண்டும்.
இதை மலேசியாகினியில் எழுதுவது மட்டும் போதாது.நாட்டு நடப்பை அறியாதவர்கள், பிஎன் நாட்டை மொட்டையடித்து வருவதை உணராதவர்கள் நிறைய பேர் உண்டு.
அனாமி_4041:என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள். கடந்த பேரணியில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. இந்தப் பேரணியில் நிச்சயம் கலந்துகொள்வேன்.