மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) 1எம்டிபி ஊழலைக் கண்டுகொள்ளாமல் பல்வேறு உயர் அதிகாரிகள்மீது அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதை முன்னாள் அம்னோ தலைவர் கைருடின் அபு ஹசான் சாடினார்.
பல தடவை எம்ஏசிசி-இடம் 1எம்டிபி ஊழல் மீதும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்கில் பல- பில்லியன் ரிங்கிட் இருந்தது பற்றியும் புகார் செய்திருப்பதாக கைருடின் கூறினார். ஆனால், நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை.
“எம்ஏசிசி, பிரதமர் அதிகார-மீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது பற்றி விசாரிக்காமல் சிறுசிறு விவகாரங்களில் மட்டுமே துணிச்சலைக் காண்பிப்பது போதாது”, என்று கைருடின் நேற்றிரவு ஓர் அறிக்கையில் கூறினார்.
எம்ஏசிசி, கடந்த மாதம் சுல்கிப்ளி அஹ்மட் அதன் தலைமை ஆணையராக பொறுப்பேற்றது முதல் அரசாங்க உயர் அதிகாரிகள் பலரின்மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால், எம்ஏசிசி என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் அது 1எம்டிபி ஊழலையும் பல- பில்லியன் ரிங்கிட் வங்கி இருப்பையும் கண்டுகொள்ளாதவரை மக்களுக்கு அதன்மீது நம்பிக்கை வராது என கைருடின் கூறினார்