பிகேஆர்: என்எப்சி விவகாரத்தில் பிரதமரும் விவசாய அமைச்சரும் பொய் உரைத்தனர்

தேசிய விலங்கு தீவன ஊட்டல் நிறுவனத்திற்கு (என்எப்சி) வழங்கப்பட்ட கடன் குறித்து பிரதமர் நஜிப்பும் விவசாய-அடிப்படை தொழில்கள் சார்ந்த அமைச்சர் நோ ஒமாரும் நாடாளுமன்றதிடம் பொய் கூறினர் என்று பிகேஆர் கூறிக்கொண்டது.

“நஜிப்பும் விவசாய அமைச்சரும் (நோ) நாடாளுமன்றத்திடம் பொய் உரைத்தனர். பிரதமரின் எழுத்து மூலமான பதிலில் ரிம181 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டது என்று கூறப்பட்டது. நோ ஒமாரின் பதிலும் (அதுவே). அதில் நலங்கள் சார்ந்த மோதல்கள் இருந்தன”, என்று கட்சியின் வியூக இயக்குனர் ரபிஸி ரமலி இன்று நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஒரு மத்திய அமைச்சரின் கணவரும் அவர்களுடைய பிள்ளைகளும் நிருவாகிக்கும் அந்த கால்நடை வளர்ப்பு நிறுவனம் வழங்கப்பட்ட ரிம256 மில்லியனுக்கு கூடுதலான முழுக் கடன் தொகையையும் முழுமையாக பெற்றுக்கொண்டுள்ளது என்று எதிர்தரப்பினர் வாதித்தனர்.

மலேசிய நிறுவன ஆணையத்திடம் (சிசிஎம்) தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் இந்தக் கடன் பற்றிய விபரங்கள்- என்எப்சியின் நடப்புக் கணக்கிலில்லாத மொத்தக் கடன் ரிம256 மில்லியனுக்கு கூடுதலாகும். அவற்றில் குறைந்த வட்டியிலான கடன் ரிம250 மில்லியன் மற்றும் கட்டமைப்புக்கான மான்யம் ரிம6 மில்லியன் – தெரிவிக்கப்பட்டுள்ளன. இது அமைச்சர்களின் பதிலுக்கு முரணாதாக இருக்கிறது என்று ரபிஸி கூறினார்.

இது சம்பந்தமான ஆவணங்களை விநியோகித்த அவர், ஆவணங்கள் முழுத் தொகையும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கொடுக்கப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன என்றார்.

“ரிம130 மில்லியன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும் (அரசாங்கத்திற்கும் என்எப்சிக்கும் இடையில்) 2008 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டது. இன்னொரு ரிம120 மில்லியன் மார்ச் 31, 2009 இல் கொடுக்கப்பட்டது”, என்று அவர் தெரிவித்தார்.

இக்கடனிலிருந்து எப்படி ரிம116 மில்லியன் என்எப்சிக்குச் சொந்தமான வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட்டு வட்டி பெறுகிறது என்பதையும் அவர் தெரிவித்தார்.

“அந்த சேமிப்பு கணக்கிலிருந்து எம்எப்சி ரிம670,000 தை வட்டியாக பெற்றுள்ளது”, என்றாரவர்.

“கடுமையான விவகாரம்”

“ஒரு பிரதமர் மக்களவையிடம் பொய் உரைப்பு கடுமையான விவகாரம், ரிம250 மில்லியன் ஒரு பெரிய தொகையாகும்”, என்று வருத்தப்பட்டுக் கொண்டார் ரபிஸி.

கணக்காய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு சிசிஎம்மிடம் தாக்கல் செய்யப்பட்டதும் சிசிஎம்மால் உறுதிப்படுத்தப்பட்டதுமான கணக்கிற்கு மாறாக அவர்கள் அளித்த பதிலுக்கு அமைச்சரும் பிரதமரும் பதில் கூற வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

“நாங்கள் கூறுவது பொய் என்று அவர்கள் கூறினால், அவர்கள் புத்தகத்தைத் திறந்து காட்ட வேண்டும்”, என்று ரபிஸி சவால் விட்டார்.