கோபிந்த் சிங் முஸ்லிமாக மாறுவார்!

 

MemotoGobindபூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோவிடம் 500 அரசார்பற்ற அமைப்புகளைப் பிரதிநிதிப்பாக கூறிக்கொள்ளும் ஒரு கூட்டத்தினர் அவரின் உள்ளத்தில் இஸ்லாத்திற்கு ஆதரவான மாற்றத்தை ஏற்படுத்தி ஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355 க்கான திருத்தங்களுக்கு ஆதரவளிக்கக் கோரும் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

இன்று பூச்சோங்கில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர், 50 பேர் அடங்கிய அக்கூட்டத்தின் தலைவர்களில் ஒருவர் இந்த நம்பிக்கையைத் தெரிவித்தார்.

இந்த கோரிக்கை மனு கோபிந்தின் உள்ளத்தை திறக்கும், அவர் சட்டம் 355 ஐ ஆதரிப்பதோடு மட்டுமில்லாமல் அதை எதிர்க்கமாட்டார், மற்றும் அவர் இஸ்லாத்திற்கும்கூட மாறுவார் என்று நாங்கள் நம்புகிறோம் மாஸ்ரிட்ஸி சாட் கூறினார்.

இந்த கோரிக்கை மனுவில் சட்டம் 355 ஐ திருத்துவதற்கான முஸ்லிம்களின் உரிமைக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் அச்சட்டத் திருத்தத்திற்கு ஒன்று ஆதரிக்க வேண்டும் அல்லது வாக்களிக்காமல் இருக்க வேண்டும் என்று கோபிந்த் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

இது முன்னதாக கோபிந்த் சிங் டிஎபி சட்டம் 355க்கான திருத்தங்களை ஆதரிக்காது என்று கூறியிருந்ததற்கான எதிர்வினையாகும்.

அக்கூட்டத்தினர் அல் ஹுஸ்னா மசூதியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோபிந்தின் சேவை மையத்திற்கு சென்றனர். அவர்கள் பல பதாகைகளை வைத்திருந்தனர். அவற்றில் ஒன்று, “பூச்சோங் முஸ்லிம்கள் கோபிந்தை நிராகரிக்கின்றனர்” என்ற வாசகம் காணப்பட்டது.

சேவை மையத்தில் அக்கூட்டத்தை சேர்ந்த அமிநுடின் யஹாயா, கோபிந்தின் உதவியாளர் தௌஃபிக் அஸ்ராயிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட தௌஃபிக் கோரிக்கை மனு அனுப்பப்படுவது பற்றி கோபிந்துக்கு தெரியும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

பின்னர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவருக்கு கோரிக்கை மனுவை அனுப்பியவர்களை தாம் மதிப்பதாகவும், இஸ்லாம் இந்நாட்டின் அதிகாரப்பூர்வ சமயம் என்பதை தாம் ஏற்றுக்கொண்டு மதிப்பதாகவும் கோபிந்த் கூறினார்.

இந்தத் திருத்தங்கள் குறித்து முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கிடையே எதிர்மாறான கருத்துகள் இருக்கின்றன. தம்மைப் பொறுத்தவரையில் அத்திருத்தங்களை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாக கோபிந்த் மேலும் கூறினார்.

இந்தத் திருத்தங்கள் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் போது தாம் அவற்றை எதிர்ப்பதற்கான காரணங்களை முழுமையாக தெரிவிக்கப் போவதாக அவர் மேலும் கூறினார்.