நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் சகோதர நிறுவனம் ஒன்று 10 மில்லியன் ரிங்கிட் பெறும் ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்றைக் கொள்முதல் செய்தது ஒரு வியூக நடவடிக்கை என ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுதின் கூறுகிறார்.
என்எப்சி உற்பத்தி தாமதமடைந்ததால் National Meat and Livestocks Corporation (NMLC) என்ற அந்த சகோதர நிறுவனத்தின் 83 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்படாமல் இருந்தது என கைரி இன்று தமது வலைப்பதிவில் சேர்க்கப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
“அந்த நடைமுறை தாமதத்திற்கு என்எப்சி நிர்வாகமே காரணம். அதன் விவரங்களை நவம்பர் 8ம் தேதி நாடாளுமன்றத்தில் விவசாய, விவசாயத் தொழில் அமைச்சர் விளக்கியுள்ளார். துணை அடிப்படையில் பண்ணைகளை உருவாக்குவதற்குப் போதுமான நிதி வசதிகள் அரசாங்கத்திடம் இருந்தன.”
“அந்தப் பண்ணைகள் உருவாக்கப்பட முடியாத போது என்எம்எல்சி-யின் நிதிகள் செலவு செய்யப்படாமல் முடங்கிக் கிடந்தன. அந்த தாமதம் ஏற்பட்ட போது முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலையை என்எப்சி நிர்வாகம் எதிர்நோக்கியது.
“துணை அடிப்படையில் உருவாக்கப்படுவதற்காக காத்திருக்கும் வேளையில் என்எம்எல்சி-க்குக் கொடுக்கப்பட்ட பணம் நடப்புக் கணக்கில் எந்த ஆதாயமும் இல்லாமல் முடங்கி கிடக்க விடலாமா அல்லது தாமதம் சமாளிக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் வேளையில் சிறிதளவு ஆதாயத்தை பெறுவதற்காக அந்தப் பணத்தை முதலீடு செய்யலாமா?”
பிகேஆர் கட்சியின் தொடர் தாக்குதல்
அந்த என்எப்சி திட்டத்தைத் தற்காத்துப் பேசும் பிஎன் பின்னிருக்கை உறுப்பினர்களுக்கு அண்மைய காலமாக தலைமை தாங்கி வருகிறார்.
அந்தத் திட்டத்தில் காணப்படுகின்ற குளறுபடிகள் 2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் வெளியிடப்பட்டது.
தோல்வி கண்ட அந்தத் திட்டத்துக்கு கூட்டரசு அரசாங்கம் வழங்கிய எளிய நிபந்தனையுடன் கூடிய 250 மில்லியன் ரிங்கிட் கடன் குறித்து கூட்டரசு அரசாங்கத்தை பிகேஆர் குறை கூறியதைத் தொடர்ந்து அந்தத் திட்டம் தொடர்பான சர்ச்சை பெரிதாகியது.