பிஎன், இராணுவத்தை அரசியலுக்குள் இழுப்பதாக பாஸ் சாடுகிறது

இராணுவத்தைக் கட்சி அரசியலுக்குள் கொண்டு வர சில தரப்புக்கள் முயலுவதாகத் தோன்றுகிறது- அது மாமன்னரை அவமானப்படுத்துவதற்கு ஒப்பாகும் என பாஸ் கூறுகிறது.

இராணுவம் மாமன்னருடைய நேரடிப் பார்வையின் கீழ் வருவதால் அத்தகைய முயற்சிகள் அகோங்கிற்குக் களங்கத்தை ஏற்படுத்துவதாக பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறினார்.

சுதந்திரம் பெற்றது முதல் நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை மாமன்னர், சுல்தான்கள் ஆகியோரின் கட்டுக்குள் இருக்கும் இராணுவம் நல்ல முறையில் நிறைவேற்றி வருகிறது என்றார் அவர்.

ஆனால் ஜுலை 9 பெர்சே 2.0 பேரணிக்குப் பின்னர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளில் போலீஸுடன் இராணுவத்தையும் சேர்த்துக் கொண்டுள்ளது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் வழி இராணுவம் கட்சி அரசியலுக்கு இழுக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

“அரசியலுக்குள் இராணுவத்தைக் கொண்டு வரும் எந்த முயற்சியும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,” என மாட் சாபு என்றும் அழைக்கப்படும் அவர் பினாங்கு கொம்தாரில் நிருபர்களிடம் கூறினார்.

“அரசியலில் இராணுவம் தலையிடுவது ஆரோக்கியமற்றது. அது எல்லா நேரங்களிலும் நடு நிலை வகிக்க வேண்டும்.”

தேர்தல் மோசடியில் தாங்கள் சம்பந்தப்பட்டதை நான்கு முன்னாள் இராணுவ வீரர்கள் ஒப்புக் கொண்டது பற்றி மாட் சாபு அவ்வாறு குறிப்பிட்டார்.

இராணுவத்தில் தாங்கள் பணியாற்றிய போது தங்களது தளபத்திய அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க 1978க்கும் 1999க்கும் இடையில் மூன்று தேர்தல்களில் தாங்கள் ஆயிரக்கணக்கான அஞ்சல் வாக்குகளில் குறியிட்டதாக அந்த நால்வரும் தெரிவித்தனர்.

தகவல்களை வெளியிட்ட அவர்கள் துரோகிகள் என ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் சுல்கிப்லி முகமட் ஜின் வருணித்தார். அந்தக் குற்றச்சாட்டுக்களை வெளியிட்டவர்களுடைய விசுவாசம் குறித்தும் அவர் கடந்த வியாழக்கிழமை நடத்திய நிருபர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

தகவல்களை அம்பலப்படுத்திய முன்னாள் இராணுவ வீரர்களைத் தற்காத்துப் பேசிய மாட் சாபு, அதற்கு தற்காப்பு அமைச்சும் தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டினார்.

மோசடி எனக் கூறப்படும் அந்த விஷயத்துக்கு அமைச்சும் தேர்தல் ஆணையமும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

அக்டோபர் முதல் தேதி பாஸ் கட்சி தனது 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் என்றும் மாட் சாபு அறிவித்தார்.

அந்த நிகழ்வை பினாங்கு நடத்தும் என்றும் அவர் சொன்னார். ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்திருக்க வேண்டிய அந்தக் கொண்டாட்டம் நோன்பு மாதம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்,

TAGS: