தடுத்து வைக்கப்பட்டோம்;எல்லாம் தமிழ்ப்படங்களில் நடப்பதுபோல இருந்தது

ஒரு நேர்காணல்  

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம். இடம்: ஹுலு சிலாங்கூர். வழக்கமாக தூங்கி வழிந்துகொண்டிருக்கும் அந்நகர் திடீரென்று சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. இடைத் தேர்தல்தான் அதற்குக் காரணம். எங்கு பார்த்தாலும் இடைத் தேர்தலுக்கான பரபரப்பு.சுற்றிலும் தேர்தல் பரபரப்பு சூழ்ந்திருந்தாலும் ஒரு காப்பிக்கடையில் அமர்ந்திருந்த இருவர் மட்டும் அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் வேறு சிந்தனையில் மூழ்கியிருந்தனர்.

யுனிவர்சிடி கெபாங்சான் மலேசியா (யுகேஎம்) மாணவர்களான முகம்மட் ஹில்மான் ஆதம், அஸ்லின் ஷபினா முகம்மட் அட்ஸா ஆகிய அவ்விருவருக்கும், இன்னொரு வாகனத்தில் ஹுலு சிலாங்கூர் நோக்கி வந்து இடையில் போலீஸ் சாலைத்தடுப்பு ஒன்றில் தடுத்துவைக்கப்பட்ட சக மாணவர்களான வூன் கிங் சாய், முகம்மட் இஸ்மாயில் அமுனுடின்  ஆகிய இருவரும் என்ன ஆனார்கள் என்ற பெரும் கவலை.

“இஸ்மமயில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். உயர்கல்வி அமைச்சு அதிகாரிகள் வந்து இறங்கியிருப்பதாகவும் அது கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்”, என்று ஹில்மான் (வலம்) கூறினார்.

“நண்பர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எப்படியாகிலும் உதவ வேண்டும் என்று எண்ணி உணவுக்காகக் கொடுத்த ஆர்டரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு பானத்தை மட்டும் அருந்திவிட்டுப் புறப்பட ஆயத்தமானேன்.

“அப்போதுதான் அது நடந்தது. நான் எழுந்து நின்றவுடன் அந்தக் கடையில் இருந்த மற்றவர்களும் எழுந்தார்கள். என்னைச் சுற்றிக் கொண்டார்கள். எல்லாம் ஏதோ தமிழ்ப்படத்தில் நடப்பதுபோல இருந்தது”, என்று சொல்லிச் சிரித்தார்.

“சுமார் 10, 12 பேர் இருப்பார்கள். அவர்கள் யாரென்று தெரியவில்லை. அவர்கள் எங்களைத் தடுத்தார்கள். வெளியில் பார்த்தபோது யுனிவர்சிடி மலாயா பாதுகாப்புத் துறை என்று எழுதப்பட்டிருந்த கருப்புநிற புரோட்டோன் வீரா கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.” அதைப் பார்த்ததும் அவர்கள் யாரென்பது புரிந்தது. ஆனால், தாங்கள் யுகேஎம் மாணவர்களாயிற்றே, தங்களை ஏன் அவர்கள் தடுக்க வேண்டும் என்பதுதான் புரியவில்லை.

“ஒருவேளை, எல்லாப் பல்கலைக்கழகங்களும் சேர்ந்து கூட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளன போலும் என்று நினைத்துக்கொண்டேன்.”

அரசியல் கல்வி  மாணவர்களான ஹில்மானும் வூனும், தங்களின் இடைத் தேர்தல் அனுபவத்தை இப்படி விவரித்தார்கள். இஸ்மாயில், அஸ்லின் ஆகிய இருவராலும் அந்த நேர்காணலில் கலந்துகொள்ள இயலவில்லை.

போலீஸ் வந்தது 

யுகேஎம்மில் அப்போதுதான் மாணவர் தேர்தல் முடிந்திருந்தது. அந்த வேகத்தில் ஹுலு சிலாங்கூர் இடைத் தேர்தலைச் சென்று காண்போம் என்று ஹில்மான் தம் மாணவத்தோழர்களை அழைத்தார்.

ஹில்மான் அப்போது சொன்னதை வூன் அப்படியே எடுத்துரைத்தார்:“பல்கலைக்கழகத் தேர்தலில் போட்டியிட்டதைப் பெரிதாக நினைக்கிறீர்களா? உண்மையான தேர்தலை இன்னும் நீங்கள் பார்க்கவில்லை.”

அவர் கூறியதை ஏற்று அனைவரும் ஹுலு சிலாங்கூர் புறப்படத் தயாரானார்கள். அங்கு சென்று வர ஒரு வேனை ஏற்பாடு செய்தார்கள். ஹுலு சிலாங்கூர் அவர்களுக்கு அவ்வளவாக பழக்கமில்லாத இடமாகும். அதனால்-அங்கு உறவினர்களைக் கொண்டுள்ள ஹில்மான், ஒரு நண்பரைத் தங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஹில்மானும் அஸ்லினும் வழிகாட்டியின் காரில் பயணம் செய்ய, வூன்னும் இஸ்மாயிலும் வேனில் பயணித்தனர்.

“வழிகாட்டி அவருடைய காரில் ஹில்மானுக்கும் அஸ்லினுக்கும் இடம் ஒதுக்கிக்கொடுப்பதற்காக அதிலிருந்த துண்டறிக்கைக் கட்டுகளையும் தேர்தல் சம்பந்தப்பட்ட மற்ற பொருள்களையும் எங்கள் வேனின் பின்புறத்தில் கொண்டு வந்து வைத்தார்”, என வூன் விளக்கினார்.

போகும் வழியில் போலீஸ் சாலைத் தடுப்பு ஒன்று இருந்தது. கார் அதைத்தாண்டிச் சென்று விட்டது. ஆனால், வேன் தடுத்து நிறுத்தப்பட்டது. அதிலிருந்த வூனும் இஸ்மாயிலும் அரை மணி நேரத்துக்குமேல் போலீசாரால் விசாரிக்கப்பட்டனர்.

“சுமார் 40 நிமிடம் கழித்து யுகேஎம் வாகனங்கள் வந்து சேர்ந்தன. பல்கலைக்கழக அதிகாரிகள் எங்களை அடையாளம் கண்டுகொண்டு எங்களைக் கைது செய்யுமாறு போலீசிடம் கூறினர்”, என்றார் வூன்.

“போலீசார் வேனைச் சோதித்துப் பார்த்தார்கள். அரசியல் அறிக்கைகளைக் கண்ட அவர்கள் தேர்தல் பரப்புரை செய்கிறீர்களா என்று வினவினர். அவை எங்கள் பொருள்கள் அல்ல என்று விளக்க முனைந்தோம். எங்கள் நண்பர்களை அழைத்து அவை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவரின் பொருள்கள் என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டோம்.”

அவ்விருவரும் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அப்பொருள்கள் எல்லாம் படமெடுக்கப்பட்டன. பின்னர் ஹில்மானும் அஸ்லினும் அங்கு வந்து சேர்ந்ததும் அவர்களும் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டனர்.

மாணவர் நடவடிக்கைகளில் தீவிர ஈடுபாடு உள்ளவரான ஹில்மான், பல்கலைக்கழக அதிகாரிகள் தாங்கள் வேன் ஏற்பாடு செய்ததை அறிந்து அதைப் பிடிப்பதற்குத் திட்டம் போட்டிருந்திருக்கிறார்கள் என்றார்.

அதில் உண்மை இருக்கலாம் என்ற வூன், தம்மை விசாரித்த யுகேஎம் அதிகாரிகள் முதலில் ஹில்மான் எங்கே என்றுதான் கேட்டார்கள் என்றார்.

“ஹில்மான் எங்கிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள விரும்பினார்கள். அதற்கு நான், ‘ஹில்மானா? எனக்குத் தெரியாது. என் வேலையை நான் செய்கிறேன். அவர் வேலை அவர் செய்வார், எதற்காகக் கேட்கிறீர்கள் என்றேன்.”

“பொய் சொல்லாதே என்று கூறி மீண்டும் ஹில்மான் பற்றி விசாரித்தனர். நான் ஒன்றும் பேசாமல் இருந்தேன்.”

நால்வரும் அன்றிரவே விடுவிக்கப்பட்டனர். ஆனால், ஹில்மான் மறுநாள் மாலை வேனை விடுவிக்கும்வரை ஹுலு சிலாங்கூரிலேயே தம் உறவினர் வீட்டில் தங்க முடிவு செய்தார்.

அப்படி தங்கியிருந்தபோது இடைத் தேர்தல் பற்றி ஆய்வுசெய்துகொண்டிருந்த ஒரு விரிவுரையாளருடன் ஹுலு சிலாங்கூரை வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது மறுபடியும் போலீசார் அவரைப் பிடித்தனர்.

“அதுதான் எனக்கு மிகவும் ஆத்திரத்தை உண்டாக்கியது. ஒரு பல்கலைக்கழக மாணவன் என்பதற்காக நான் கைது செய்யப்பட்டேன். நான் ஹுலு சிலாங்கூரில் இருக்கக்கூடாது என்று போலீசார் கூறினர்”, என்றாரவர்.

இடைத்தேர்தலின்போது எதிர்பார்த்ததற்கு மாறாக கூடுதலாகவே பல அனுபவங்களைப் பெற்ற அந்நால்வரும் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பிச் சென்றனர். இனி, என்ன? வழக்கமான பல்கலைக்கழக வாழ்க்கைதான் என்ற நினைப்பில் இருந்தனர்.

ஆனால், அத்துடன் நிற்கப்போவதில்லை. தங்கள்மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும்; அவ்விவகாரம் நாட்டின் இரண்டாவது உயர்நீதிமன்றம்வரை கொண்டுசெல்லப்படும் அங்கு அளிக்கப்படும் தீர்ப்பு பல்கலைக்கழக மாணவர்களைப் பொருத்தவரை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் அவர்கள் அறிந்திருக்கவில்லை.

நாளை: பல்கலைக்கழக நீக்கத்தை எதிர்த்துப் போராட்டம்

TAGS: