பெர்சே: நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டால் பிஎஸ்சி-யால் பயனில்லை

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  பொதுத் தேர்தலை நடத்த முடிவெடுத்தால் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டியிருக்கும் என்பதால் தேர்தல் சீர்திருத்ததுக்காக நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி) அமைக்கப்படும் நோக்கம் பயனற்றுப் போய்விடும் என்று பெர்சே 2.0 கூறுகிறது.

பிஎஸ்சி அதன் பணியை முடிக்கிறதோ இல்லையோ அடுத்த தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம் என்று நஜிப் கூறியிருப்பது வருத்தமளிப்பதாக அது இன்று தெரிவித்தது.

“அது, தேர்தல் நடைமுறைகளில் நிலவும் முறைகேடுகளை அகற்ற  பிஎஸ்சி அமைக்கப்படும் நோக்கத்தையே கெடுத்துவிடும்.

“குழு அதன் அறிக்கையை நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், அதற்குமுன்பே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால்  அக்குழுவால் எந்தப் பயனும் இருக்காது”, என்று பெர்சேயை வழிநடத்தும் குழு ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.

அதனால், “தேர்தல் சீரமைப்புத் தொடர்பான பிஎஸ்சி-இன் பரிந்துரைகளை-வாக்காளர் பட்டியலை ஒழுங்குபடுத்தல், அழியாய அடையாள மையைப் படுத்தல், இயல்பாகவே வாக்காளராதல், பரப்புரைக்குக் குறைந்தது 21 நாள்களை ஒதுக்குதல் என்பன போன்றவற்றை-  நடைமுறைக்குக் கொண்டுவரும் வரையில்” தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பெர்சே 2.0 மீண்டும் வலியுறுத்தியது.

பிஎஸ்சி-யைவிடவும் “தேர்தல்கள், தேர்தல் சட்டங்கள், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் முதலியவற்றை ஆராய” அரச விசாரணை ஆணையம் ஒன்று அமைப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் அது குறிப்பிட்டது.

TAGS: