போலீஸ் வாகனம் தம்மை மோதியது என மாட் சாபு வலியுறுத்துகிறார்

பெர்சே 2.0 பேரணி மீது நடத்தப்படும் பொது விசாரணையில் பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு இன்று சாட்சியமளித்தார்.

போலீஸ் வாகனம் ஒன்றுடன் நிகழ்ந்த விபத்து காரணமாக காலில் ஏற்பட்ட காயத்துக்குத் தாம் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டியிருந்தாக அவர் சொன்னார்.

அவர் இன்று சுஹாக்காம் என்னும் மலேசிய மனித உரிமை ஆணையக் குழுவிடம் பேசினார். கேஎல் சென்ட்ரலுக்கு அருகில் உள்ள ஜாலான் டிராவர்ஸில் போலீஸ் வாகனம் ஒன்று தம் மீது மோதியதாக அவர் வலியுறுத்தினார்.

“கீழே இறக்கமாக இருந்த  பாதையில் மோட்டார் சைக்கிளில் பின்னிருக்கைப் பயணியாக நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது அந்த போலீஸ் வாகனம் எதிர்த் திசையில் சாலையின் தவறான பக்கத்தில் வந்து கொண்டிருந்தது. அது திடீரென நிறுத்தப்பட்டது.”

“புரோட்டான் வாஜா காரின் முன்புற விளக்கு மீது என் கால் முட்டி தாக்கப்பட்டது,” என மாட் சாபு  கூறினார்.

தாம் மண்டரின் கோர்ட் ஹோட்டலிலிருந்து புறப்பட்டதாகவும் போலீஸ் தம்மைப் பின் தொடருகிறது என்பது தமக்குத் தெரியாது என்றும் அவர் சொன்னார்.

பெர்சே 2.0 பேரணியை போலீசார் எதிர்கொண்ட முறை குறித்தும் போலீஸ் அத்துமீறல்கள் குறித்தும் பொது மக்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்திய பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை தங்களது வாகனங்களில் ஒன்று மோதியதாக கூறப்படுவதை மறுக்க போலீசார் முயன்று வருகின்றனர்.

அதில் உண்மை இல்லை எனக் கூட்டரசு பொது ஒழுங்கு, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இயக்குநர் சாலே ரஷிட் கூறியுள்ளார்.

சாலையைப் பிரிக்கும் மேடையில் மோட்டார் சைக்கிளோட்டி மோதியதையும் மாட் சாபு  விழுந்ததையும் கேமிரா ஒளிப்பதிவுகள் காட்டுவதாக சாலே சொன்னார்.

மோட்டார் சைக்கிள் மாட்டிக் கொண்டதை அந்த வீடியோ காட்டவில்லை என்றாலும் நான்கு சக்கர போலீஸ் வாகனம் ஒன்று இரண்டு மோட்டார் சைக்கிள்களை விரட்டுவதை காட்டும் பகுதி அதில் காணப்படுகிறது. அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் அந்த பாஸ் அரசியல்வாதி சென்று கொண்டிருந்தார்.

TAGS: