ஆயர் மொலேக் லாக்-அப் மனிதர்களை அடைத்து வைக்க தகுதியற்றவது: சுஹாகாம் சாடல்

மலேசிய  மனித   உரிமை  ஆணைய(சுஹாகாம்) த்தின்  ஆணையர்  ஜெரால்ட்   ஜோசப்   ஆயர்  மொலேக்   லாக்-அப்   சென்றபோது   முதலில்    அவரை  நிலைகுலைய   வைத்தது   அதன்   சகிக்க  முடியாத   நாற்றம்தான்.

நாற்றம்   என்றால்  அப்படி   ஒரு     நாற்றம்.

“அங்கு   தடுத்து  வைக்கப்பட்டிருப்பவர்கள்   அடிக்கடி   துவைக்கப்படாத    லாக்-அப்   ஆடைகளை   அணிந்திருந்தார்கள். ஆடைகள்   போதுமான   அளவில்  இல்லையாம்”,  என்று   அவர்   மலேசியாகினியிடம்   தொலைபேசி-வழி    நேர்காணலில்    தெரிவித்தார்.

ஜூலை  31இல்,  ஆயர்  மொலேக்   லாக்-அப்பைப்   பார்வையிட   சுஹாகாம்  குழு  ஒன்று    சென்றது   அதில்    இடம்பெற்றிருந்தவர்களில்   ஒருவரான   ஜோசப்  அந்த   லாக்-அப்   பயன்பாட்டுக்கு   உகந்ததல்ல  என்றும்   அதை   இழுத்து   மூட  வேண்டும்   என்றும்   கடுமையாகக்  கூறினார்.

புதன்கிழமை   அந்த   லாக்-அப்   குறித்து   அறிக்கை  ஒன்றை   வெளியிட்ட   சுஹாகாம்  அங்கு   120  பேர்  ”மனிதத்தன்மையற்ற  முறையில்”   அடைத்து  வைக்கப்பட்டிருப்பதாகக்  கூறியது.

அந்த   லாக்-அப்   உள்ள   இடம்   100  ஆண்டுகளுக்கு   முன்பு   ஆயர்  மொலேக்   சிறைச்சாலையாக    இருந்தது   என  ஜோசப்  கூறினார்.

சிறைச்சாலை  கடந்த   ஆண்டு    மூடப்பட்டு   ஜோகூர்    சிம்பாங்  ரெங்காம்   கொண்டு   செல்லப்பட்டது.  ஆனால்,  அதன்  ஒரு   பகுதி   2009-இலிருந்து   போலீஸ்    லாக்-அப்பாகப்    பயன்படுத்தப்பட்டு   வருகிறது.

நாற்றம்  ஒருபுறமிருக்க,  தடுப்புக்கைதிகளுக்கு   சுத்தமான   குடிநீரும்  போதுமான   அளவுக்குக்  கிடைப்பதில்லை  என்பதை     அறிந்து    சுஹாகாம்    ஆணையர்கள்   அதிர்ச்சி   அடைந்தனர்   என்றார்   ஜோசப்.

கைதிகள்  உள்ள  சிற்றறைகளில்    குடிநீர்   குழாய்கள்  இல்லை.

“உணவு   விநியோகம்   செய்பவர்கள்   உணவு  கொண்டு  வரும்போது   தண்ணீர்  பொட்டலங்களையும்   தருவார்கள்.  ஒரு   நாளைக்கு   மூன்று  பொட்டலங்கள்”,  என்றாரவர்.

7மீ x4மீ  அறையில்  10பேர்வரை    வைக்கப்பட்டிருக்கிறார்கள். அறைகளில்  கழிப்பிடமும்  உண்டு.  பெரும்பாலான   தடுப்புக்கைதிகள்   நோயாளிகள்போல்தான்   காட்சியளித்தார்களாம்.

“அப்படிப்பட்ட  சூழலில்  இருப்பதே      சித்திரவதைதான்.  போலீசார்கூட   அங்கு  இருக்க   விரும்புவதில்லை.  மனிதர்கள்   வாழத்தக்க   சூழல்   அங்கில்லை”,  என்றார்.

லாக்-அப்     சட்டப்படி     மருத்துவ    அதிகாரிகள்    அங்கு    இருக்க     வேண்டும்.   ஆனால், அப்படி   யாரும்   இல்லை.

தடுத்து  வைக்கப்பட்ட   கைதிகளிடமிருந்து   காசநோய்   போன்றவை   தொற்றிக்கொள்ளாதிருக்க  போலீசார்  முகமூடி    அணிந்து   கொள்கிறார்கள்,  கைகளில்  கையுறை  போட்டுக்  கொள்கிறார்கள்.

அவர்கள்   அங்குள்ள  நிலவரத்தை   மேலதிகாரிகளிடம்   எடுத்துச்  சொல்லாமலில்லை.  மேலதிகாரிகளிடமிருந்து  “பட்ஜேட்  இல்லை”   என்று பதில்  வந்துள்ளது.