ஹார்வஸ்ட் பங்குகள் தொடர்ந்து சரிகின்றன; மேலும் 30% வீழ்ச்சி

நட்சத்திரப் பங்குகள் என வருணிக்கப்பட்ட ஹார்வஸ்ட் கோர்ட் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைகின்றன. நேற்று 30 விழுக்காடு குறைந்த அதன் மதிப்பு இன்று காலை வாணிகம் தொடங்கிய போது மேலும் 30 விழுக்காடு குறைந்தது.

அதன் பங்கு விலை 1 ரிங்கிட் 5 சென் -ஆகவும் வாரண்ட் விலை 0.89 சென் -ஆகவும் காலை 9 மணிக்கு புர்சா மலேசியா பங்குச் சந்தையில் வாணிக தொடங்கிய போது சரிந்தன. அந்த விலைகள் நேற்றைய விலைகளான முறையே 1 ரிங்கிட் 49 சென், 1 ரிங்கிட் 27 சென்-உடன் ஒப்பிடுகையில் 30 விழுக்காடு சரிவுக்குச் சமமாகும்.

அந்த நிறுவனத்தில் பங்குதாரரும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் இரண்டாவது புதல்வருமான முகமட் நஜிபுடின் நஜிப்- அந்த நிறுவனத்தில் தமது முதலீடுகள் விதிமுறைகளுக்கு ஏற்ப செய்யப்பட்டுள்ளன என்றும் அரசாங்கச் சலுகைகள் ஏதும் சம்பந்தப்படவில்லை என்றும் அறிக்கை விடுத்த போதிலும் நேற்று தொடங்கிய அதன் பங்கு வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை.

மொத்தம் 1.2 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனத் திட்டங்களில் அரசாங்கம் சம்பந்தப்படவில்லை என சின் சியூ டெய்லி, சைனா பிரஸ் ஆகிய இரண்டு சீன மொழி தினசரிகளுக்கு நஜிபுடின் வழங்கிய பேட்டி  நேற்று  வெளியிடப்பட்டது.

நஜிபுடின் தலைவராக இருக்கும் சாஹாஜுத்தா (சபா) சென் பெர்ஹாட், ஹார்வஸ்ட் கோர்ட்-டுக்கு அந்த திட்டங்களை வழங்கியுள்ளது.  சாஹாஜுத்தா கோத்தா கினாபாலுவில் சத்து போர்னியோ பேரங்காடித் தொகுதியைக் கட்டியுள்ளது.

ஹார்வஸ்ட் கோர்ட் பங்கு விலை குறித்த ஊகத்தையும் தம்மைப் பற்றி பரவியுள்ள வதந்திகளையும் பற்றிக் குறிப்பிட்ட நஜிபுடின், தாம் அதனால் “மிகவும் கவலை அடைந்துள்ளதாக” சொன்னார். ஆனால் அந்த நிலைமையச் சீர்படுத்த தம்மால் எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு அக்டோபர் 13ம் தேதி ஹார்வஸ்ட் கோர்ட் பங்கு விலை எட்டு சென் -ஆக இருந்தது. அது கிட்டத்தட்ட 2,563 விழுக்காடு வரை ஏற்றம் கண்டது.

புர்சா மலேசியா பங்குச் சந்தை ஹார்வஸ்ட் கோர்ட் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ‘குறிக்கப்பட்ட பங்குகள்’ என ஏற்கனவே அறிவித்தது.  அதன் பரிவர்த்தனையையும் ஒரு நாளைக்கு அது நிறுத்தி வைத்தது. புர்சா மலேசியா பங்குச் சந்தையில் அதன் பங்குகள் பரிவர்த்தனை மிக அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“குறிக்கப்பட்ட பங்குகள்’ என அறிவிக்கப்பட்டால் அந்தப் பங்குகளைக் கொள்முதல் செய்வதற்கு முன்கூட்டியே ரொக்கம் செலுத்த வேண்டும். அவற்றை விற்பதற்கு முன்னர் எந்தப் பாக்கியும் இருக்கக் கூடாது. அந்தப் பங்குகள் ஊக வாணிகம் மித மிஞ்சிப் போவதைத் தடுப்பதே அந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.”

கடந்த சில ஆண்டுகளாக நலிவான நிதி அடைவு நிலையைப் பெற்றிருந்த அந்த வெட்டுமர அடிப்படை நிறுவனம், நஜிபுடினையும் அவரது வர்த்தகப் பங்காளி ரேமண்ட் சான் – னையும் அக்டோபர் 28ம் தேதி இயக்குநர்களாக நியமித்தது. அதற்குப் பின்னர் அதன் பங்குப் பரிவர்த்தனை பெருகியது.