“ரசாலியை பிரதமர் ஆக்க பக்காத்தான் தலைவர்கள் தயாராக இருந்தனர்”

அம்னோ குவாங் மூசா எம்பியான தெங்கு ரசாலியைப் பிரதமராக ஏற்றுக்கொள்ள பக்காத்தான் தலைவர்கள் பலர் தயாராக இருந்தனர் என பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் சைட் ஹுசேன் அலி  தெரிவித்துள்ளார்.

தெங்கு ரசாலி, 2008 செப்டம்பர் 16-ல் ஆட்சியைக் கவிழ்க்கும் மாற்றரசுக் கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிமின் முயற்சிக்கு ஆதரவாக குறைந்தது 15-இலிருந்து 20 எம்பிகள் வரை கட்சித்தாவ வைத்தால் அவருக்குப் பிரதமர் பதவியை வழங்க உடன்பாடு காணப்பட்டதாக அந்த மூத்த அரசியல்வாதி நேற்றிரவு வெளியிடப்பட்ட Memoir Perjuangan Politik ( ‘ஓர் அரசியல் போராட்டவாதியின் நினைவுகள்’ ) என்ற நூலில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 16-ல் ஆட்சியைக் கவிழ்க்க உண்மையிலேயே திட்டமிடப்பட்டது என்றும் அத்திட்டத்தை அறிந்த அம்னோ, கட்சித்தாவலைத் தடுக்க அதன் எம்பிகள் பலரைத் தைவானுக்கும், மக்காவுக்கும் நியூ யோர்க்குக்கும் அனுப்பி வைத்தது என்றும் அவர் கூறினார்.

“அதன்பின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சாபா, சரவாக்கில் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ரிம3 பில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார்”, என்று சைட் ஹுசேன் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அந்நூல் சைட் ஹுசேனின் அரசியல் அனுபவங்களை நேர்மையாகவும் தெளிவாகவும் எடுத்தியம்புகிறது என்று பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவால் வருணிக்கப்பட்டுள்ளது. அந்நூலின் வெளியீடு நேற்றிரவு ஷா ஆலமில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.