நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகமட் ஹசான் தங்களை அவமானப்படுத்தியுள்ளதாக கூறி அதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்த மாநிலத்தில் உள்ள 68 கிராமங்களை சேர்ந்த ஒராங் அஸ்லி மக்கள் இன்று காலை சிரம்பானிலுள்ள மாநிலச் செயலகக் கட்டிடத்திற்கு முன்பு கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அந்த ஆர்ப்பாட்டத்துக்கு நெகிரி செம்பிலானில் உள்ள ஒராங் அஸ்லி கிராமங்களின் கட்டமைப்பு ( Jaringan Kampung-Kampung Orang Asli Negeri Sembilan ) ஏற்பாடு செய்திருந்தது.
ஒராங் அஸ்லி மக்களை “புறம்போக்கு வாசிகள்” என முகமட் வருணித்ததை அவர்கள் ஆட்சேபிப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
செப்டம்பர் 21ம் தேதி கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள அந்தக் கருத்து ஒராங் அஸ்லி மக்களை “அவமானப்படுத்துகிறது” என்றும் ‘ஒராங் அஸ்லி உணர்வுகளை மதிக்காதது’ என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
“முகமட் ஹசான் அத்தகைய கருத்தை வெளியிட்டிருக்கக் கூடாது. ஏனெனில் அது எங்களைக் காயப்படுத்தியுள்ளது. எங்களுடைய வாழ்க்கை முறையையும் எங்கள் பிள்ளைகளுடைய வாழ்க்கை முறையையும் எங்கள் சமூகத்தைச் சாராதவர்கள் மதிக்கவில்லை என்பதையும் அது காட்டுகிறது என அந்தக் கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லங்காப் கெசு நிருபர்களிடம் கூறினார்.
ஒராங் அஸ்லி கிராமங்கள் காட்டு ஒதுக்கீட்டுப் பகுதிகளில் அமைந்துள்ளன. அதனால் அவர்கள் வெறும் “புறம்போக்கு வாசிகள்” எனப் பொருள்படும். அவர்களுக்கு அந்த நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லை என முகமட் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
மந்திரி புசாரிடம் மகஜரைக் கொடுக்க மூன்று மணி நேரம் காத்திருந்தனர்
ஒராங் அஸ்லி மக்களுடைய மூதாதையர்கள் அந்த நிலத்தில் வாழ்ந்துள்ளனர். அதனால் மந்திரி புசார் குறிப்பிடும் காட்டு ஒதுக்கீட்டுப் பகுதிகளைக் காட்டிலும் அந்தக் கிராமங்கள் பழமையானவை என முகமட்-டின் கருத்தை மறுத்த லங்காப் சொன்னார்.
முகமட்டின் கருத்து, கூட்டரசு அரசியலமைப்பில் குறிக்கப்பட்டுள்ள-வாழ்வதற்கான உரிமை (5வது பிரிவு), சமநிலை (8வது பிரிவு), சொத்து உரிமை (13வது பிரிவு) ஆகியவற்றுக்கு எதிராகவும் உள்ளன.
“ஆகவே காட்டு ஒதுக்கீட்டுப் பகுதிகளில் ஊடுருவியது ஒராங் அஸ்லிக்கள் அல்ல. மாறாக எங்கள் பரம்பரை நிலத்தில் சிலரே ஊடுருவியுள்ளனர்,” என லங்காப் குறிப்பிட்டார்.
மூன்று மணி நேரம் காத்திருந்த பின்னர் நெகிரி செம்பிலானில் உள்ள ஒராங் அஸ்லி கிராமங்களின் கட்டமைப்பின் தலைவர்கள் முகமட்டிடம் மகஜரைக் கொடுத்தனர். முகமட் அதற்கு முன்னதாக மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அந்த மகஜரைப் படித்த பின்னரே தாம் அந்த விவகாரம் குறித்துக் கருத்துரைக்கப் போவதாக முகமட் சொன்னார்.