அஸலீனா: 1எம்டிபி விசாரணையை மேலும் தொடர வேண்டும் என்று எஜி போலிஸ்சிடம் கூறியுள்ளார்

 

1எம்டிபி விவகாரம் குறித்து போலிஸ் அதன் விசாரணையை மேலும் தொடர வேண்டும் என்று சட்டத்துறைத் தலைவர் (எஜி) போலிஸ்சை கடந்த அக்டோபர் 24 இல் கேட்டுக்கொண்டுள்ளார் என்று பிரதமர் துறை அமைச்சர் அஸலீனா ஓத்மான சைட் கூறினார்.

கடந்த நான்கு மாதங்களில் இவ்விவகாரம் பற்றிய போலிஸ் விசாரணை அறிக்கையை எஜி நிராகரித்தது இது இரண்டாவது தடவையாகும் . அந்த விசாரணை இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் அஸலீனா இவ்வாறு கூறுகிறார்.

ஆகவே, இந்த விசாரணை குறித்து அளிக்கப்படும் விவரங்கள் போலிஸ் விசாரணையைப் பாதிக்கக்கூடும். இதை அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோவுக்கு அளித்துள்ள பதிலில் அஸலீனா கூறுகிறார்.

எனினும், கடந்த ஏப்ரல் 12 இல், அன்றைய போலிஸ் படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பாக்கார் 1எம்டிபி சம்பந்தமான விசாரணையை முடித்து விட்டதாகவும் விசாரணை அறிக்கையை எஜி அலுவலகத்திடம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

ஆனால், கடந்த ஜூனில் போலிஸ் விசாரணையை மேலும் தொடர வேண்டும் என்று எஜி கூறியுள்ளதாக காலிட் கூறிக்கொண்டார். மேலும், இது ஒரு சிவில் விவகாரமாதலால் “போலிஸ் தலையிடாது” என்றும் அவர் கூறினார்.

பின்னர், கடந்த மாதம், புத்தம் புதிய போலிஸ் தலைவர் முகம்மட் பூஸி ஹருன் 1எம்டிபி விவகாரத்தை போலிஸ் விசாரிக்க வேண்டிய தேவையில்லை என்றார்.

“இல்லை, இல்லை. விசாரணை முடிக்கப்பட்டு விட்டதால் (மேலும் விசாரிக்க வேண்டிய) தேவை நமக்கு இல்லை; பிஎசி அல்லது அமைச்சரவையிலிருந்து இவ்விவகாரம் பற்றி மேற்கொண்டு உத்தரவு வந்தாலன்றி”, என்று பூஸி செப்டெம்பர் 20 இல் செய்தியாளர்களிடம் கூறினார்.