தெங் சாங் இயோ பினாங்கின் அடுத்த பிஎன் தலைவர்

பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக், பினாங்கின் அடுத்த பிஎன் தலைவர் யார் என்பதை செவ்வாய்க்கிழமையே முடிவு செய்துவிட்டார் என்று பிஎன் வட்டாரமொன்று கூறியது.

கெராக்கான் தலைவர் கோ சூ கூனை அடுத்து பினாங்கின் கெராக்கான் உதவித் தலைவர் ஒங் தியான் லை மாநில பிஎன் தலைவராவதை நஜிப் விரும்பவில்லை என்றும் அவர் கட்சித் தலைமைச் செயலாளர் தெங் சாங் இயோவைத்தான் விரும்புகிறார் என்றும் அவ்வட்டாரம் தெரிவித்தது.

நஜிப் ஒருவரை நிராகரிப்பதும் இன்னொருவரை விரும்புவதும் ஏன் என்று தெரியவில்லை. ஆனால், தெங் மாநில பிஎன் தலைமைப் பொறுப்பை ஏற்கப்போவதை கோ சனிக்கிழமை அறிவிப்பார் என்று மட்டும் தெரிகிறது.

அன்றுதான் கோ தாம் மாநில பிஎன் தலைவர் பொறுப்பைவிட்டு விலகுவதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று கோலாலம்பூரில் கட்சித் தலைமையகத்தில் அடுத்த பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என்பதை மட்டுமே கோ அறிவித்தார்.

கட்சிக்குப் புதுப்பொலிவூட்ட பல்வேறு சீரமைப்புகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், கோவின் நடவடிக்கைகள் கட்சி உறுப்பினர்களுக்கு ஏமாற்றமளித்திருப்பதாகத் தெரிகிறது.

பினாங்கு கெராக்கான் சட்ட, மனித உரிமைப் பிரிவுத் தலைவர் பல்ஜிட் சிங், பொதுத் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்ற கோவின் அறிவிப்பில் “புதுமை ஒன்றுமில்லை. அது ஏற்கனவே எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றுதான்” என்றார்.

அது ஒரு நல்ல அறிவிப்புத்தான் என்ற பல்ஜிட் அது போதாது என்றும் கட்சியின் அடிநிலை உறுப்பினர்கள் கோவிடமிருந்தும் மற்ற தலைவர்களிடமிருந்தும் மேலும் பல தியாகங்களை எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார்.

கட்சியின் அடிநிலை உறுப்பினர்களிடமிருந்து கிடைக்கும் பின்னூட்டங்கள், 2008-இல் படுதோல்வி கண்ட கட்சி முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால் மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

தலைவர்கள் துணிச்சலுடன் சீரமைப்புக்களைச் செய்திட வேண்டும் என்று பல்ஜிட் தெரிவித்தார்.

“அடிநிலை உறுப்பினர்கள் தங்கள் எண்ணத்தைத் தெள்ளத்தெளிவாக உணர்த்தி வீட்டனர். இப்போது பினாங்கு மக்கள் கோ மாநில பிஎன் தலைவர் பதவியிலிருந்து விலகுவதையும் தலைமைப் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைப்பதைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

ஆனால், புதிய தலைமைத்துவத்தைத் தேர்ந்தெடுக்கும் விசயத்தில் “போர்ட் டிக்சன் உணர்வு” கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை அவர் நினைவுப்படுத்தினார்.

1980-இல் போர்ட் டிக்சனில் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலக நினைத்தார் காலஞ்சென்ற டாக்டர் லிம் சிங் இயு.

அப்போது பினாங்கு முதல்வராக இருந்த லிம், பால் லியோங்கிடம் அப்பதவியை ஒப்படைக்க விரும்பினார். ஆனால், இன்னொருவர், இப்போது கட்சியின் ஆலோசகராகவுள்ள டாக்டர் லிம் கெங் ஏய்க்கும், அப்பதவியை விரும்புவது தெரிய வந்தது.

“லிம், தலைவர்கள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றார். கட்சிக்குள் ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் லிம் நடுநிலை வகித்தார். முடிவில், கெங் ஏய்க் வெற்றிபெற்றார். லிம் அதன்பின் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கிக் கொண்டார். எல்லாருமே அதை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும்”, என்றார் பல்ஜிட். 

கெராக்கானின் அழுத்தம் கொடுக்கும் ஒரு தரப்பான கெராக் கெராக்கானின் தலைவரான இயாப் பான் சூனும் கோவின் நடவடிக்கையில் ஏமாற்றம் கொண்டிருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோவின் அறிவிப்பு பிசுபிசுத்துப் போனது என்றாரவர்.

“அவர் கட்சித் தலைவர், மாநில பிஎன் தலைவர் பதவிகளைவிட்டு விலகுவதாக அறிவித்து கட்சியின் ஆலோசகர் என்ற பொறுப்பில் இருக்கப்போவதாகக் கூறியிருக்கலாம். தலைமைத்துவ பொறுப்பைப் புதியவர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டும். அதல்லாமல் அவர் கட்சித் தலைவராகவும் மாநில பிஎன் தலைவராகவும் தொடரும்வரை கட்சிக்கு அவர் ஒரு சுமையாகத்தான் இருப்பார்”, என்றாரவர்.

TAGS: