முதிர்ச்சியடையாத பகாங் மந்திரி பெசார், சாடினார் பினாங்கு முதல்வர்

 

வெள்ளம் சம்பந்தமாக நேற்று பகாங் சட்டமன்றத்தில் பகாங் மந்திரி பெசார் அட்னான் யாக்கோப்புக்கும் டிஎபி சட்டமன்ற உறுப்பினர் தெங்கு ஸுல்புரிக்கும் இடையில் நடந்த விவாதத்தின் போது, தெங்குவை அட்னான் குத்துச் சண்டைக்கு வறுமாறு சவால் விட்டார். இது குறித்து கருத்துரைத்த பினாங்கு முதலமைச்சர் குவான் எங், இது ஒரு மிக வெட்கக்கேடான செயல் என்றார்.

நான் எனது ஏமாற்றத்தைத் தெரிவிப்பதோடு அட்னானின் வன்முறையான நடத்தையைக் கண்டிப்பாதாக குவான் எங் கூறினார்.

டிஎபி சட்டமன்ற உறுப்பினர் தெங்கு ஸுல்புரியின் வாதத்தை எதிர்கொள்ள முடியாமல் போனதால் அட்னான் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.

சட்டமன்றத்தில் ஒரு மந்திரி பெசார் முதிர்ச்சியடைந்த முறையிலும் நேர்மையாகவும் நடந்துகொள்ளத் தவறியது மிக வெட்கக்கேடான செயல் என்று கூறிய குவான் எங், மலேசியர்களுக்கு வன்முறைதான் தீர்வு என்ற கெட்டதோர் முன்னுதாரணத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார் என்றாரவர்.

மந்திரி பெசார் விரும்பினால் தம்மைக் குத்தலாம், ஆனால் தாம் திருப்பியடிக்கப் போவதில்லை என்று கூறிய தெங்கு ஸுல்புரியை பாராட்டி ஆதரவு தெரிவித்த குவான் எங், அவரது பண்பும் நேர்மையும் அவர் முதிர்ச்சியடைந்த தலைவர் என்பதைக் காட்டுகிறது என்றார்.

இச்சம்பவம் மலேசியர்களின் கண்களைத் திறந்து நல்ல தலைவர்களைத் தேர்வு செய்ய வேண்டியதின் அவசியத்தை உணர்த்தும் என்று அவர் மேலும் கூறினார்.

தெங்கு ஸுல்புரி மெந்தகாப் சட்டமன்ற உறுப்பினராவார்.