ஊழல் அரசியல்வாதிகளைத் தேந்தெடுக்கும் மக்கள் ஊழலுக்கு உடந்தையாக இருக்கின்றனர்.

 

கீ. சீலதாஸ், நவம்பர் 27, 2017.  அரசியல்வாதி  என்பவர்  யார்?  அரசியல்வாதியாக  செயல்பட   எப்படிப்பட்ட  தகுதிகள்  தேவை?  இவ்வாறு  கேட்பவர்கள்  உண்டு.  பொதுவாக அரசியல்வாதி  என்பவர்  அடக்கமானவர்,  பணிவானவர், தன்னடக்கமுடைய  அபிப்பிராயம்  அல்லது  தன்னடக்கமான  அபிப்பிராயத்தைக்  கொண்டிருப்பவர்  என்பார்கள்.  அப்படிப்பட்டவர்  மக்களின்  நலனில்  மிகுந்த  கரிசனம்  கொண்டவராகவும்,  சமுதாயத்தைப்  பாதிக்கும்  பிரச்சினைகளுக்குத்  தீர்வு  காண்பதும்,  அப்படிப்பட்ட  பிரச்சினைகள்  மேலும்  எழாதவாறு  பார்த்துக்கொள்ளவும்  முற்படுபவர்.

சுயநலத்தைக்  காட்டிலும்  பொது  நலத்தில்  கரிசனமும்,  கவனமும்,  ஊழற்ற  வாழ்க்கை,  ஊழலுக்கு  இடம்  தராது  நடந்துகொள்வது,  எதிலும்  நிதானம் மற்றும் சொல்வதில்  நியாயம்:   இவையாவும்தான்  முடிவான  அரசியல்வாதிக்கான  தேவைகள்,  தகுதிகள்  என்று  முடிவாகச்  சொல்ல  முடியாது.  காரணம்  என்னவென்றால்  அரசியல்வாதிகளின்  குணம்,  தரம்,  பண்பு,  நடத்தை  யாவும்  அவர்  சார்ந்திருக்கும்  கட்சியைப்  பொறுத்திருக்கும்.  கட்சி,  அதன்  தலைவர்கள் நியாயமானவர்கள்  என்றால்  கட்சியின்  எல்லா  வகை  உறுப்பினர்களும்  நியாயமானவர்களாக  நடந்துகொள்வர்.  அதுவே  வாழ்க்கையின்  நெறியாகக்  கொண்டிருப்பார்கள்.  மாறாக  தலைவர்  தம்  நலத்தை  மட்டும்  கவனித்துக்  கொள்பவர்,  தம்  குடும்பம்,  உறவினர்,  நண்பர்கள்  போன்றோருக்கும்  நன்மை  பயக்கும்  வகையில்  நடந்து  கொண்டால்  அவரைப்  பின்பற்றுபவரும்  அவரின்  குணாதிசயங்களைப்  பெற்றிருப்பர்  என்ற  உண்மையை  அனுபவம்  உறுதிப்படுத்துகிறது.  எனவே  ஒருவர்  அரசியல்வாதியாக  பணியாற்ற  முற்படும்போது  முதல்  நடவடிக்கையாக  எப்படிப்பட்ட  அரசியல்வாதியாகத்  திகழ  வேண்டும்  என்பதை  முடிவு  செய்துகொள்ள  வேண்டும்.  சமுதாயத்துக்கு  சேவை  செய்யவேண்டும்  என்றால்  அது  தூய்மையான,  நேர்மையான  எண்ணமாக  இருக்க வேண்டும்.  அப்படிப்பட்ட  பல  தலைவர்களின்  வாழ்க்கை  வரலாற்றைப்  படித்தால்  தெளிவு  பெறலாம்.  உதாரணத்துக்கு  மகாத்மா  காந்தி,  ஜவகர்லால்  நேரு,  மா  சே  துங்,  சுக்கர்னோ,  காமராஜ்,  அண்ணாதுரை,  வினோபா  பாவே  ஆச்சரியார்,  கென்னடி,  ஃபிடெல்  காஸ்ட்ரோ,  போன்றோரின்  அரசியல்  வாழ்க்கை  அனுபவங்கள்  நேர்மையான  அரசியல்  ஞானத்துக்கு  வழிகாட்டும்.  பண  அரசியல்தான்  முக்கியம்  என்றால்  இந்தியாவிலும்  இந்த  நாட்டிலும்  அதற்கான அனுபவத்தைப்  பெற  நிறைய  வாய்ப்புகள்  உண்டு..  அரசியலைப்  பயன்படுத்தி  கோடிக்கணக்கில்  சம்மபாதிக்க  வேண்டும்  என்கின்ற  ஆசை  இருக்குமானால்,  தமிழகமும்.  இந்த  நாடும்  நிறைய  உதாரணங்களை  வழங்குகின்றன.

நாடு,  மக்கள்,  சமுதாயம்  இவற்றின் நன்மையைக்  கருத்தில்  கொண்டு  செயல்படுபவர்கள்  பொதுநலனை  மனதில்  கொண்டவர்கள்  என்றும்.  தங்கள்  நலனில்  மட்டும்  குறியாக  இருப்பவர்  சுயநலவாதி  என்றும்  விளக்கப்படுகிறது.  இதில்  எந்தத்  தரத்தில்  செயல்பட  விரும்புபவரின்  எண்ணத்தைப்  பொறுத்துத்தான்  அரசியல்வாதியின்  தகுதியை  நிர்ணயிக்க  முடியும்.  சில  நாடுகளில்  சட்டமன்ற  உறுப்பினர்களாக  தேர்வு  பெற  கல்வி  தேவைபடும்.  சில  நாடுகளில்  பணபலம்தான்  அரசியல்வாதிக்கான  தகுதியை  நிர்ணயிக்கிறது.  பொல்லாத  அரசியல்வாதிகளைத்தான்  நாடாளுமன்றத்துக்கு  அனுப்புகின்றனர்  நல்லவர்கள்  என்கிறார்  வில்லியம் ஆர். .சைமன்.  புகழ்  மிக்க  விஞ்ஞானி  அல்பர்ட்  ஐன்ஸ்டாயின்  சொன்னதும்  கவனத்தில்  கொள்ள  பொருத்தமானதாகும்.  “உலகத்தை  தீயதையே  செய்வோரால்  மட்டுமே  அழிக்கமுடியாது;  ஆனால்  அந்த  தீயவர்களின்  நடத்தையைப்  பார்த்துக்  கொண்டிருப்பவர்கள்தான்  அழிவுக்குக்  காரணம்”  என்றார்.

மீண்டும்  மீண்டும்  ஊழல்  அரசியல்வாதிகளைத்  தேர்ந்தெடுக்கும்  மக்கள்,  ஊழலுக்கு  உடந்தையாகச்  செயல்படுகின்றனர்  என்றாலும்  தகும்.