‘தீவிரவாத’ ஜமாலுக்கு அஸ்மினை எதிர்த்துப் போட்டியிடும் தகுதி இல்லை

புக்கிட்   அந்தாராபங்சா    சட்டமன்றத்    தொகுதியில்      சிலாங்கூர்   மந்திரி   புசார்   அஸ்மின்  அலியை   எதிர்த்துப்போட்டியிடும்    தகுதி   சுங்கை  புசார்  அம்னோ  தலைவரான   ஜமால்  முகம்மட்  யூனுஸ்      கிடையாது.

சொல்லப்போனால்,  ஜமால்,    ‘ஓரளவு   சிந்தித்து  செயலாற்றக்கூடியவர்களை’க்  கொண்ட   எந்தத்   தொகுதியிலும்   போட்டியிடும்   தகுதியற்றவர்  என   அஸ்மினின்  அரசியல்    செயலாளர்    சுஹாய்மி   ஷாபி   கூறியதாக    சினார்   ஹரியான்   அறிவித்துள்ளது.

“மாநிலச்   சட்டமன்றத்துக்குப்    போட்டியிடும்    வேட்பாளருக்குச்   சில   தகுதிகள்   வேண்டும்.  (புக்கிட்   அந்தாராபங்சா)   தொகுதி    வாக்காளர்கள்  பொதுவாக   படித்தவர்கள்    என்பதால்   வேட்பாளர்   நிபுணத்துவம்   வாய்ந்தவராகவும்    முதிர்ச்சியுடன்   செயல்படுபவராகவும்    இருத்தல்   வேண்டும்.

“வேட்பாளர்    கருத்துவேற்றுமைகளை   மதிப்பவராகவும்   எந்த  விவகாரமானாலும்     உணர்ச்சிக்கு    இடம்   கொடாமல்    புத்திசாலித்தனமாக   தீர்வு   காண்பவராகவும்   இருப்பது   முக்கியம்”.

ஜமால்   நேற்று   ஓர்    அறிக்கையில்,   அந்தாராபங்சா  தொகுதியில்   அஸ்மினை   எதிர்த்துப்   போட்டியிட    நோக்கம்    கொண்டிருப்பதாகக்   குறிப்பிட்டிருப்பதற்கு   எதிர்வினையாற்றிய   சுஹாய்மி   இவ்வாறு   கூறினார்.

அம்னோ   தலைவர்களுக்கே   ஜமாலின்   தகுதிமீது   நம்பிக்கை   இருக்காது     என்றும்   ஸ்ரீமூடா   சட்டமன்ற    உறுப்பினருமான   சுஹாய்மி    கூறினார்.

ஜமால்  ஒரு  தீவிரவாதி.  அவரைப்  போன்றவர்களுக்கு   சிலாங்கூரில்    எந்த   இடத்திலும்    போட்டியிட   தகுதியில்லை  என்று   சொன்ன   அவர்,   ஆனாலும்  எந்த  இடத்திலும்   போட்டியிடும்   உரிமை    அவருக்கு    உண்டு    என்றும்   குறிப்பிட்டார்.