சிறையில் உள்ள எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமை விடுவிப்பது மீது விவாதம் நடத்தக் கோரி என்.சுரேந்திரன் (பிகேஆர்- பாடாங் சிராய்) கொண்டுவந்த அவசரத் தீர்மானத்தை நாடாளுமன்றம் நிராகரித்தது.
அன்வார் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டத்தைச் சுட்டிக்காட்டி மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா தீர்மானத்தை நிராகரித்தார்.
“நீதிமன்றத்தில் நியாயமான முறையில் வழக்காடப்பட்டு குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டதாகத்தான் நான் காண்கிறேன். சட்டப்படியான உத்தரவின்படிதான் அன்வார் சுங்கை பூலோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்”, என பண்டிகார் எழுத்துப்பூர்வ பதிலில் கூறினார்.
நவம்பர் 6-இல், மனித உரிமைகளைக்கான ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு (ஏபிஎச்ஆர்), அன்வார் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து சுரேந்திரன் இந்த அவசரத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
தீர்மானம் நிராகரிக்கப்பட்டதால் அதிருப்தியுற்ற சுரேந்திரன், அதற்கான காரணத்தை இன்றைய மக்களவைக் கூட்டத்தில் வினவினார்.
“ வழக்கு நீதிமன்றத்தில் இருந்தால் மட்டுமே அதைப் பற்றி விவாதிக்க முடியாது. அது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்”, என்று கூறிய சுரேந்திரன் இந்த விவகாரத்தை ஏன் விவாதிக்கக்கூடாது என்று வினவினார்.
ஆனால், இன்றைய கூட்டத்துக்குத் தலைமையேற்றிருந்த துணைத் தலைவர் ரோனல்ட் கியாண்டி அவரது கோரிக்கையை மறுத்து மக்களவைத் தலைவர் முடிவு செய்து விட்டார் அதுவே இறுதியானது என்றார்.
அதற்கு சுரேந்திரன், “இது ஒருதலைசார்பான முடிவாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தை மக்களவையில் விவாதிக்க முடியாவிட்டால் வேறு எங்கு விவாதிப்பது? வெளியிலா, அப்படிச் செய்தால் அது தேச நிந்தனைக் குற்றம் என்பார்கள்.
“நாங்கள் அரசாங்கத்தைக் குறைகூறும் தீர்மானம் கொண்டுவரும்போதெல்லாம் அது நிராகரிக்கப்படுகிறது. இதில் பாரபட்சம் தெரிகிறது”, என்றார்.
ஐயா n .சுரேந்திரன் அவர்களே– இதெல்லாம் நடக்குமா?எனினும் முயற்சிப்பதில்தவறு இல்லை– ஆட்சி மாற்றம் தேவை– அதன் வழி தான் ஏதும் செய்ய முடியும்– இதற்கெல்லாம் காரணகர்த்தா இன்று எதிர் புறத்தில்– காலம் எப்படி மாற்றுகிறது? அத்துடன் அரசியல் அறிவுவளர வேண்டும்.நடக்குமா?