இன, சமய ஒற்றுமை  உணர்வு  தேர்தலோடு  நின்று  விடக்கூடாது

-கீ. சீலதாஸ், நவம்பர் 28, 2017.

எல்லோரையும்  மதிக்க  வேண்டும்  என்று  பிரதமர்  டத்தோ ஸ்ரீ  நஜிப்  ரசாக்  சொன்னதானது  காலங்காலமாக   வலியுறுத்தப்பட்ட  கருத்தாகும்.  ஆனால்,  இந்தக்  காலகட்டத்தில்  பிரதமரே  அந்தக்  கருத்தை  வலியுறுத்தி  இருப்பது,  பிறரை  மதிக்கும்  பண்பு  கீழ்நோக்கி  போய்க்கொண்டிருப்பதைத்  தடுக்க  வேண்டும்  என்ற  நோக்கமாகவே  கருதுவதில்  தவறு  இல்லை.  ஆனால், பொதுவாழ்வில்   தலைமைத்துவம்  வகிப்போரின்  அறிவுரை,  ஆலோசனை,  கருத்து மற்றும் விவேகம் அனைத்தையும்  ஜீரணிக்கும்  தரத்தைக்  கொண்டிருக்காது  என்ற  பரவலானக்  கருத்தை  ஒதுக்கிவிடவும்  முடியவில்லை.  இதற்கும்  காரணம்  உண்டு.  கடந்த  சில  ஆண்டுகளாக,  குறிப்பாக  நஜீப்  பிரதமர்  பதவியை  ஏற்ற பிறகு  இன,  மதத்  துவேஷ  நடவடிக்கைகள்  கவலைக்குறிய  இடத்தை  அடைந்துவிட்டதாக   கருதப்படுகிறது.

பிற  இனங்களை,  பிற  மதங்களை,  பிற  மொழிகளை,  பிற  கலாச்சாரங்களை  மதித்து  வாழ்ந்த  காலம்  இருந்தது.  இன.  மத,  பேதமின்றி  சமய  விழாக்களை  கொண்டாடுவோரை  வாழ்த்துவது,  அந்நியோனியமாகப்  பழகுவது  மலாயாவின்  சுதந்திரத்துக்கு  முன்பு  காணப்பட்ட  அற்புதங்களாகும்.  அப்போது  இன  ஒற்றுமை,  சமயப்  பொறுமை  பற்றி  யாரும்  பேசவில்லை,  வலியுறுத்தவில்லை,  காலனித்துவவாதிகள்  அப்படிப்பட்ட  நல்ல  இணக்கமான  இன,  சமய  உறவை  வளர்க்க  எதுவும்  செய்யவில்லை.  பிரித்து  ஆளும்  கொள்கையில்  ஊறிப்போன  காலனித்துவவாதிகளுக்கு  பல்லின  ஒற்றுமை  தேவை  அற்றதாகவே  இருந்தது.

சுதந்திரத்திற்குப்  பிறகு  இன,  சமய  ஒற்றுமை  பற்றி  மிகவாகப்  பேசப்பட்டது,  நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டன.  ஆனால்,  காலம்  போகப்போக  இன  ஒற்றுமை  இன  அரசியலோடு  நின்றுவிட்டது.  ஆம்,  இனவாரியான  அரசியல்  கட்சிகள்  கூடி  ஒரு  பரந்த  அமைப்பைக்  கண்டு  அதன்  கீழ்  தேர்தல்  வெற்றியைக்  காண  ஒன்றுபட்டார்களே  அன்றி,  இன,  சமய  ஒற்றுமைக்கு  வெறும்  உதட்டளவு  ஆதரவுதான்  கொடுக்கப்பட்டது,  கொடுக்கப்பட்டுக்  கொண்டு  இருக்கிறது.  இதை  ஆழமாகச்  சிந்திக்கும்போது  நாட்டில்  இனப்  பகைமை  வளர்ந்து  விட்டதைக்  காணமுடிகிறது.  சமய  வேறுபாட்டை  ஆழமாக்குவதில்  காட்டப்படும்  உற்சாகம்  மனித  நேயத்தை  அழிக்கும்  தரத்தை  அடைந்துவிட்டது.

இந்தப்  புவியில்  யாவரும்  வாழ  போதுமான  இடமும்,  வாய்ப்பும்  இருக்கின்றன.  அவற்றை  மனித  நேயத்தோடு  அணுகினால்  யாவரும்  அமைதியுடனும்,  மகிழ்வுடனும்  அனுபவிக்கமுடியும்.  நட்புக்கும்,  அன்புக்கும்  பிறரை  மதிக்கும்  தன்மைக்கும்  முதலிடம்  தருவதுதான்  மனிதப்  பண்பு  என்பதை  சான்றோர்கள்  சொல்லிவிட்டுப்  போனார்கள்.  இந்தக்  காலத்து  மனிதன்  பகைமையை  வளர்ப்பதில்தான்  கரிசனம்  காட்டுகிறான்.  அதைத்  தவிர்க்க  வேண்டும்.  அதை  எங்கே  ஆரம்பிக்க  வேண்டும்?  பள்ளிக்கூடங்களில்  ஆரம்பிக்க  வேண்டும்.  எல்லோரும்  சமம்  என்பதை  உணர்த்தும்  கருத்துக்களை  அங்கே  கற்பிக்க  ஆரம்பித்தால்தான்  எதிர்கால  சமுதாயம்  ஒற்றுமையாக  வாழ  முடியும்.  இன,  சமய  ஒற்றுமையைப்  பற்றி  பேசும்போது  அந்த  நல்ல  உணர்வுகள்  உள்ளத்தில்  இருந்து  உதிக்க  வேண்டும்.  உதட்டளவோடு  நின்றுவிடக்கூடாது.  இன,  சமய  ஒற்றுமை  உணர்வு  தேர்தலோடு  நின்று  விடக்கூடாது.  அந்த  ஒற்றுமையை  வளர்க்கும்  உறுதி  என்றென்றும்  முன்னிலை  வகிக்க  வேண்டும்.  அடுத்த  தலைமுறையிலாவது  துவேஷத்தை  துறந்த  சமுதாயத்தை  காண  இப்பொழுதே  அஸ்திவாரம்  போட்டாக  வேண்டும்.  அதைச்  செய்வார்களா?