நவம்பர் 28, 2017 – இன்று அதிகாலை, 3 மணிக்கெல்லாம், சிம்பாங் ரெங்கம் ஓய்விடத்திலிருந்து தியாகு நடக்கத் தொடங்கிவிட்டார். அவருடன் அஞ்சாதமிழனும் இணைந்து கொண்டார்.
சற்று விடிந்ததும், தங்கிய இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு வருவதாக கௌதமன் கூற, அவர்களுக்குத் துணையாக தமிழ் இனியன் மகிழுந்தில் செல்ல ஆயத்தமானார்.
நேற்று, நவம்பர் 27 – மாவீரர் நினைவேந்தல் நாள். தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை நினைவில்கொள்ள, காலநேரம், இடம் தேவையில்லை என எண்ணி, நேற்றிரவு, கெரெமோயாங் ஓய்விடத்திலேயே தங்கள் மரியாதையைச் செலுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
உலக வரைபடத்தில், நம்மினத்திற்கொரு அடையாளம் தேடி, தம்முடலை அழித்துக்கொண்ட அவர்களின் ஆன்மா, எங்கும் எவ்விடத்திலும் வியாப்பித்திருக்கும், ஒவ்வொருவர் உள்ளத்திலும் உயிர்பெற்றிருக்கும் என்று அவர்கள் அம்மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்.
அதன்பிறகு, சீக்கிரமே உறங்கச் சென்றதாக தியாகு தெரிவித்தார்.
“அதிகாலையிலே நடக்கத் தொடங்கினால்தான், மதியம் சூரியன் சுட்டெரிப்பதற்கு முன், யொங் பேங் நகரை அடையமுடியும். அதற்கு இன்னும் 30 கிலோ மீட்டர் செல்ல வேண்டி இருந்தது. திட்டமிட்டப்படி நானும் தோழர் அஞ்சாதமிழனும் காலை 11.30 மணிக்கெல்லாம், யொங் பேங் நகரை வந்தடைந்தோம்”, என்றார் தியாகு.
“யொங் பேங் நகரம் சரியாக 99 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது.
“இன்று இரவு, யொங் பேங் தமிழ் இளைஞர் மணி மன்றம், ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். அந்த மண்டபம் இங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எங்கள் நடைப்பயணத்தின் நோக்கம் மற்றும் இருமொழி திட்டம் பற்றி பேச எங்களை அழைத்துள்ளனர்,” என்று தமிழ் இனியன் தெரிவித்தார்.
அந்தத் தமிழ் இளைஞர் மணிமன்ற மண்டபத்திற்கு இன்னும் சரியாக 1 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
“ஆக, தற்செயலாக, இந்த நடைப்பயணத்தின் 100-வது கிலோ மீட்டரில் அந்த மண்டபம் அமைந்துவிட்டது, இது எங்களுக்கு ஒரு சிறப்பான விஷயமாகும்,” என்றும் தமிழ் இனியன் கூறினார்.
இன்று முகநூலில் இந்த நடைப்பயணத்தை நேரடியாக ஒளியேற்றியதைப் பார்த்து, தங்களுக்குப் பலர் வாழ்த்துகள் தெரிவித்ததாக அவர்கள் கூறினார்கள். மேலும், இன்றிரவு சிலர் அவர்களை வந்து சந்திக்க உள்ளதாகவும் தெரிகிறது.
இன்றிரவு, யொங் பேங் தமிழ் இளைஞர் மணிமன்ற மண்டபத்தில் அவர்கள் தங்கியுள்ளனர். நாளை அதிகாலை 3 மணிக்கு, ஜொகூர் மாநிலத்தின் வடப் பகுதியில் அமைந்திருக்கும் ச்’சா ஆ பட்டணத்தை நோக்கி அவர்களின் பயணம் மீண்டும் தொடரும்.
நாளை இரவு ச்’சா ஆ பட்டணத்தில் அவர்கள் தங்கி, ஓய்வெடுப்பார்கள் எனத் தெரிகிறது. சுற்றுவட்டார தமிழ் உணர்வாளர்கள் அவர்களைச் சென்று காணலாம்.
மேல் விவரங்களுக்கு : – https://www.facebook.com/MotherTongueEducation/ முகநூல் பக்கம் செல்லவும்.
அவர்களைச் சந்திக்க விரும்பும் அன்பர்கள், 012 4341474 – தமிழ் இனியன் / 016 948 9218 – கௌதமன் என்ற எண்களில் அழைக்கலாம்.
-ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்
வாழ்த்துக்கள்-பாராட்டுகள்– என்னுடைய ஆதரவுஎப்போதும். தொடரட்டும் உங்களின் நடைப்பயணம்.