பிஎன் 14ஆவது தேர்தலுக்கு 95% தயார், ஹமிடி கூறுகிறார்

 

எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு பாரிசான் கூட்டணி 95 விழுக்காடு தயாராக இருப்பதாக துணைப் பிரதமரும் பிஎன் துணைத் தலைவருமான அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார்.

அந்த “முக்கியமான நாள்” சீனப் புத்தாண்டிற்குப் பிறகு, அதாவது பெப்ரவரி 16 க்குப் பிறகு, வரலாம் என்று த ஸ்டார் நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறினார்.

நாங்கள் தயார். பிரதமர் மணி அடித்தவுடன் நாங்கள் போர்க்களத்திற்குச் செல்வோம் என்று கூறிய ஸாகிட், தாம் சீனப் புத்தாண்டுப் பிறகு என்று கோடி காட்டியிருப்பது புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்தவுடனே என்று பொருள்படாது என்றார்.

2008 ஆம் ஆண்டில், சீனப் புத்தாண்டு முடிந்த ஆறு நாட்களுக்குப் பின்னர் பெப்ரவரி 13இல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

பின் ஆட்சிக்கால தவணை அடுத்த ஜூன் 24 இல் முடிவுக்கு வருகிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.