பினாங்கு மாநிலம் நில விற்பனையில் ஈடுபடுவதைக் குறைகூறுவோருக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் லிம் குவான் எங் , முந்திய அரசுடன் ஒப்பிடும்போது தமது அரசு குறைவான நிலங்களைத்தான் விற்பனை செய்துள்ளது என்றார்.
“பிஎன் அரசு விற்றத்தைவிட இப்போதைய பினாங்கு அரசு 36 மடங்கு குறைவான நிலங்களைத்தான் விற்பனை செய்துள்ளது ஆனாலும் அதன் மூலம் அதற்குக் கூடுதல் வருமானம் கிடைத்தது . காரணம் வெளிப்படையான டெண்டர் முறையில் விற்பனை செய்யப்படுகின்றது”, என லிம் நேற்றிரவு ஓர் அறிக்கையில் கூறினார்.
90களின் தொடக்கத்திலிருந்து 2008வரை மாநிலத்தை வழிநடத்திய பிஎன் அரசு மொத்தம் 3661 ஏக்கரை விற்றது. அதன்வழி கிடைத்த வருமானம் ரிம1.0586 பில்லியன். அதேவேளை ஹராபான் அரசு 2008-இலிருந்து இதுவரை 106. 1 ஏக்கரைத்தான் விற்றுள்ளது. ஆனால், அரசுக்கு அதன்வழி கிடைத்த வருமானம் ரிம1.1102 பில்லியன்.
கடந்த சில மாதங்களாக பிஎன் தலைவர்கள் மாநில அரசு அதன் செலவுகளுக்கு நில விற்பனையைத்தான் நம்பியுள்ளது என்று குற்றஞ்சாட்டி வருவதையும் லிம் மறுத்தார்.
நில விற்பனையில் கிடைத்த வருமானத்தில் ரிம939.2 மில்லியன் பினாங்கு மேம்பாட்டு நிறுவனத்தின் கட்டுப்படி விலை வீடமைப்பு நிதிக்குச் சென்றுள்ளது. ரிம439.32 மில்லியன் அல்லது 10.4%தான் அரசின் செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.
இது அரசு அதன் செலவினத்துக்கு நில விற்பனை வருமானத்தை நம்பியிருக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்று கூறியவர் வரிகளின் மூலமாகவும் (ரிம628.34 மில்லியன் அல்லது 15விழுக்காடு) வரியற்ற வருமானங்கள் (ரிம 952.96 மில்லியன் அல்லது 23 விழுக்காடு) மூலமாகவும் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது என்றார்.