காலிட் இப்ராகிம் சிலாங்கூரில் அம்னோ-பாஸ் ஆட்சி அமைய அச்சாணியாக இருப்பாரா?

முன்னாள்  சிலாங்கூர்   மந்திரி   புசார்   அப்துல்  காலிட்  இப்ராகிம்  அம்னோவுக்கும்  பாஸுக்கும்  நல்ல  பிள்ளையாக     நடந்துகொள்வதைப்   பார்க்கையில்    சிலாங்கூரைக்  கைப்பற்றும்    அம்னோவின்    திட்டம்   எளிதில்   நிறைவேறும்போல்   தோன்றுவதாக   சிலாங்கூர்  அமனா   தலைவர்   இஸாம்   ஹஷிம்  ஊகிக்கிறார்.

“காலிட்   பாஸ்,  அம்னோ   தலைவர்களுக்கு   நெருக்கமாக    இருக்கிறார்.  பாஸுக்கும்   அம்னோ   தலைவர்   நஜிப்   அப்துல்   ரசாக்குக்கும்   நல்ல    நட்பு   இருக்கிறது.  இதிலிருந்து   பாஸும்  அம்னோவும்  ஒத்துழைப்பது    எளிதில்   நடக்கக்கூடிய    ஒன்றுதான்”,  என  இஸாம்  மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

“பாஸ்    ஏற்கனவே  ‘கிங்மேக்கர்’   ஆக    விரும்புவதாக    தெரிவித்துள்ளது.  எனவே  எந்தக்   கட்சி    அதன்  கோரிக்கைகளுக்கு  உடன்படுகிறதோ   அந்தக்   கட்சியுடன்தான்   சேரும்”,  என்றார்.

நேற்று   காலிட்  இப்ராகிம்    துணைப்  பிரதமர்   அஹமட்  ஜாஹிட்  ஹமிடி   முன்னாள்   சிலாங்கூர்  எம்பி    முகம்மட்  முகம்மட்   தயிப்   ஆகியோருடன்   சிலாங்கூர்   அம்னோ   மாநாட்டில்   கலந்து கொண்டு   ஆச்சரியப்பட   வைத்தார்.

அங்கு    ஊடகங்களிடம்    பேசிய    காலிட்,   14வது   பொதுத்    தேர்தலில்   பாஸுக்கும்   அம்னோவுக்கும்    உதவப்போவதாகக்   கூறினார்.

“அம்னோவுக்கு   உதவுவேன்,  அதே   நேரத்தில்   எனக்கு   முன்பு   உதவிய   பாஸ்    நண்பர்களிடம்   மக்களை   ஒன்றிணைக்க      உதவுவேன்    என்றும்  கூறியுள்ளேன்”,  என்று   பண்டார்   துன்   ரசாக்கின்   சுயேச்சை  எம்பியான   அவர்  கூறினார்.

ஆனால்,  காலிட்டால்    பெரிய    தாக்கம்     ஏற்படும்      என்று    சிலாங்கூர்    பிகேஆர்  தகவல்     தலைவர்    சுஹாய்மி   ஷாபி    நம்பவில்லை.

“அவருடைய   காலம்    முடிந்து    விட்டது…….காலிட்டின்   அரசியல்    வழக்கமான   அரசியலுக்கு    ஒத்துவராது.  அது   அவருக்கே  உரிய   வழி.

“அது   அவருக்கு    வசதியாக   இருக்கலாம்.  ஆனால்,  அது   பாஸுடன்   ஒத்துப்போகாது.   அம்னோவைப்    பற்றிச்   சொல்லவே     வேண்டியதில்லை……எதிர்காலத்தில்     பிணக்குகள்    தோன்றவே   செய்யும்”,  என  சுஹாய்மி    கூறினார்.

காலிட்,   முன்பு   பிகேஆர்   ஆட்சி    செய்யும்   சிலாங்கூரில்   மந்திரி   புசாராக   இருந்தார்.  2014  அவர்   கட்சியிலிருந்து   நீக்கப்பட்டார்.

அதன்பின்னர்    அவர்,      பாஸின்  பல்வேறு  நிகழ்வுகளில்   காணப்பட்டிருக்கிறார்.  பாஸின்   இரண்டு   முக்தாமார்கள்,    செப்டம்பரில்    திரெங்கானுவில்    நடைபெற்ற   பாஸ்டாகிம்  2.0    பேரணி   போன்றவற்றில்    அவர்   கலந்துகொண்டார்.

அப்போதெல்லாம்    அவர்   பாஸின்   போராட்டத்தை    ஆதரிப்பதாகவும்    ஆனால்,   அக்கட்சியில்   சேரும்   எண்ணம்    கிடையாது   என்றும்    கூறிவந்துள்ளார்.

காலிட்   முன்பு   முப்பதாண்டுகளாக    அம்னோ    உறுப்பினராக    இருந்தவர்.  2006-இல்தான்   அவர்   பிகேஆரில்   சேர்ந்தார்.