நஜிப் கூறிய “இரத்தம் சிந்தும்” கருத்து தேச நிந்தனையானது, முகைதின் கூறுகிறார்

 

அம்னோ “இரத்தம் சிந்தவும்” விருப்பம் கொண்டுள்ளதாக பிரதமர் நஜிப் ரசாக் கூறியிருப்பது தேச நிந்தனையாகும் என்று பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் கூறிக்கொண்டார்.

இது தேச நிந்தனையைவிட அதிகமானது. போலீஸ் படைத் தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறிய முகைதின், “பிரதமரே, நீர் கூறியது தேச நிந்தனைக்குச் சமமானது, நீர் பிரதமராக இருந்தாலும்கூட உம்மீது குற்றம் நாங்கள் குற்றம் சுமத்துவோம்” என்று போலீஸ் கூறுமா என்று நேற்று ஈப்போவில் பெர்சத்து நிக்ழ்ச்சியில் பேசிய முகைதின் கேட்டார்.

மலாய்க்காரர்களும் பூமிபுத்ராக்களும் அடைந்துள்ள வெற்றி அம்னோ நடத்திய போராட்டத்தின் விளைவாகும், குறிப்பாக அனைத்து உறுப்பினர்களும் இரத்தம் மற்றும் வியர்வைச் சிந்துவதற்கும், கட்சிக்கு விசுவாசமாக இருப்பதற்கும் கொண்டிருந்த விருப்பத்தின் விளைவாகும் என்று நஜிப் அவருடைய வலைத்தளத்தில் டிசம்பர் 2 இல் அம்னோவின் 71 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்கு முன்பாக, கூறியிருந்தார்.

இது போன்ற ஒரு கருத்தை ஹிண்ட்ராப், மசீச அல்லது டிஎபி கூறியிருந்தால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள் என்று முகைதியின் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தவர்களிடம் கூறினார்.

“அவர்கள் இது போன்ற எதனையும் கூறவில்லை, ஆனால் நமது நாட்டின் தலைவர் கூறினார்”, என்று முகைதின் மேலும் கூறினார்.