எம்னெஸ்டி: இசா கைதுகள் நஜிப்பின் “சீரமைப்பை”க் கேலி செய்கின்றன

என்மெஸ்டி இண்டர்நேசனல், சாபா, தாவாவில் 13 பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (இசா) கைது செய்யப்பட்டது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அந்தக் கோடூரச் சட்டத்தையே அகற்றப்போவதாக அளித்த வாக்குறுதியையே கேலி செய்வதுபோல் இருக்கிறது என்று கூறியுள்ளது.

“மக்களைத் தடுத்துவைக்க அச்சட்டம்  பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது மலேசிய அரசாங்கம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை அகற்றும் தன் திட்டத்தைத் தானே கேலி செய்வதுபோல் இருக்கிறது”, என்று எம்னெஸ்டி இண்டர்நேசனலின் ஆசிய இயக்குனர் சேம் ஜரிபி கூறினார்.

“இசாவை அகற்றப்போவதாக உறுதிகூறுவது மட்டும் போதாது. பிரதமர் நஜிப் இப்படிப்பட்ட நடவடிக்கையை நிறுத்தவும் வேண்டும்”, என்று  இன்று ஓர் அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டார்.

“அந்த 13 பேரும் குற்றம் புரிந்தார்கள் என்று சந்தேகப்பட்டால் அவர்கள்மீது குற்றம் சுமத்த வேண்டும் இல்லையேல் அவர்களை விடுவிக்க வேண்டும்.

“குற்றம் சாட்டப்படாமலும் விசாரணை இல்லாமலும் மக்களைச் சிறையில் பூட்டிவைப்பது சட்டத்தை வெளிப்படையாக அவமதிக்கும் செயலாகும்.”

நவம்பர் 14-இலிருந்து 16வரை  போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஏழு மலேசியரும் ஆறு வெளிநாட்டவரும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை தேசிய போலீஸ் தலைவர் இஸ்மாயில் ஒமார் நேற்று உறுதிப்படுத்தினார்.

அவர்கள் “சாபாவில் பயங்கரவாத இயக்கத்துக்குப் புத்துயிர் கொடுக்க முனைந்தார்கள்” என்று கூறி 1960 உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 73(1)-இன்கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

வழக்கு விசாரணையின்றி காலவரையில்லாமல் தடுத்து வைக்க இடமளிக்கும் இசா சட்டம், மாற்றரசுக் கட்சியினர், பயங்கரவாதிகள் உள்பட அரசைக் குறைகூறுவோரைக் காவலில் வைப்பதற்குப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அச்சட்டத்தை அகற்றப்போவதாக நஜிப் அறிவித்து இரண்டு மாதங்கள் ஆகின்ற வேளையில்   அதே சட்டத்தைப் பயன்படுத்திக் கைது செய்திருக்கிறார்கள் என்பதை எம்னெஸ்டி சுட்டிக்காட்டியது.

TAGS: