'அரைவேட்காட்டு" ஆர்சிஐ அறிக்கையில் மகாதிர் அளித்த சாட்சியம் காணவில்லை

 

பேங்க் நெகாரா 1990களில் அந்நியச் செலாவணி சந்தையில் அடைந்த நட்டங்கள் குறித்து அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் விசாரணையின் போது டாக்டர் மகாதிர் முகமட் அளித்த முக்கியமான ஆவணங்கள் சேர்க்கப்படவில் என்று அவரது வழக்குரைஞர் ஹனிப் காதிரி அப்துல்லா கூறுகிறார்.

விசாரணையின் போது மகாதிர் 495 பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள் மற்றும் எழுத்து மூலம் அளித்த சாட்சியங்கள் ஆகியவற்றை மகாதிர் அளித்திருந்தார் என்று ஹனிப் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையை படிப்பவர்களுக்கு அதன் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகள் மட்டுமே தெரியும். மகாதிர் அளித்த ஆதாரங்கள் பற்றி எதுவும் தெரிந்தகொள்ள முடியாது என்று கூறிய ஹனிப், “அது நியாயமற்றது. தற்போதைய நிலையில், அது ஓர் அரைவேக்காட்டு அறிக்கை”, என்றார்.

ஆர்சிஐ அதன் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு அளிக்கப்பட்ட 495 பக்கங்களை அந்த அறிக்கையில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தாம் எதிர்வரும் திங்கள்கிழமை ஆணையத்தின் செயலகத்திற்கு கோரிக்கைவிடப் போவதாக அவர் கூறினார்.

திருப்திகரமான பதில் டிசம்பர் 8 க்குள் கிடைக்காவிட்டால், இந்த அறிக்கையை வெளியிடாமல் தடுக்கும் நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ஹனிப் மேலும் கூறினர்.