தேர்தல் ஆணையம் (இசி) செகாமாட்டில் கட்டி முடிக்கப்படாத ஒரு முகாமுக்கு இராணுவ வாக்காளர்களை மாற்றிவிடுவதைத் தடுக்காததன்வழி 14வது பொதுத் தேர்தலில் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வெற்றியைத் தட்டி பறித்து விட்டது என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
“ஆவி வாக்காளர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் ஒரு ஆவி இராணுவ முகாமில் ஆவி வாக்காளர்கள் இருப்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறோம். செகாமாட்டில் இன்னும் கட்டி முடிக்கப்படாதிருக்கும் இராணுவ முகாமுக்கு 1.051 இராணுவ வாக்காளர்களை மாற்றிவிடுவது 14வது பொதுத் தேர்தலில் வெற்றியைத் ‘திருடிக்கொள்ள’ இசியும் பிஎன்/அம்னோ அரசாங்கமும் மேற்கொள்ளும் ஒரு முயற்சி என்பதற்கு மறுக்கப்பட முடியாத சான்று”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
கட்டி முடிக்கப்படாத முகாமுக்கு 1,051 இராணுவ வாக்காளர்கள் மாற்றப்பட்டிருப்பதற்கு டிஏபி ஆட்சேபனை தெரிவித்து ஆட்சேபனையை இசி நிராகரித்தது குறித்து அவர் கருத்துரைத்தார்.
இருப்பதற்கோ பணியாற்றுவதற்கோ தகுதியற்ற ஒரு இடத்தில் 1051 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
14வது பொதுத் தேர்தலில் தோற்றுப்போகும் அபாயமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளைப் பாதுகாப்பான தொகுதிகளாக்க அம்னோ/பிஎன் அரசாங்கம் இதுபோன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடுவதாகவும் அதற்கு இராணுவமும் இசியும் துணை போயிருப்பதாகவும் லிம் வலியுறுத்தினார்.