14 -வது பொதுத் தேர்தல், அரசாங்கத்தை வழிநடத்தும் நஜிப் இரசாக் அல்லது எதிர்க்கட்சியை வழிநடத்தும் லிம் கிட் சியாங், இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கானது என்று அம்னோ மகளிர் தலைவர் ஷாரிசாத் ஜாலீல் தெரிவித்தார்.
“இரண்டு தேர்வுகள் உள்ளன – நஜிப் தலைமையிலான பி.என். அரசாங்கம் அல்லது ‘மஹாராஜா லிம்’ தலைமையிலான எதிர்க்கட்சி அரசாங்கம்,” என இன்று புத்ரா உலக வாணிப மையத்தில், அம்னோ மகளிர் பொதுக் கூட்டத்தில் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
நாட்டை ‘எதிர்க்கட்சியினர் வசம் இழந்துவிடாமல்’ இருப்பதை உறுதி செய்யுங்கள் என்றும் ஷாரிசாத் அம்னோ மகளிர் பிரதிநிதிகளைக் கேட்டுக்கொண்டார்.
இந்த இரண்டு தேர்வுகளில், நஜிப் தலைமையில் இயங்கும் ‘வலது பக்கத் தரப்பினரை’ மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“நஜிப்பையும் அவரின் சாதனைகளையும் நாம் அறிவோம். அது வலது பக்கம்.
“இடது பக்கம், ஓ மக்களே, டிஏபி-யினால் இயக்கப்போகும் ஓர் அரசாங்கம். நீண்டகாலமாக நாம் கட்டியெழுப்பிய இந்த நாட்டை, பேரினவாத தலைமைத்துவத்திடம் மலேசிய மக்கள் விட்டுவிடுவார்களா? அவர்களின் நடவடிக்கைகள் நமக்கு மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறதே?” என்று அவர் கூறினார்.
அது நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய, அனைத்து பிரதிநிதிகளும் அவரோடு ஒன்றிணைந்து, ‘முழுமையாக’ தொடர்ந்து போராட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.