டிசம்பர் 7, 2017 – நெகிரி செம்பிலான், பண்டார் சிரம்பான் செலாத்தான் – நடைப்பயணத்தின் 13-ம் நாள், உடல்நலக்குறைவின் காரணமாக தியாகுவும் அஞ்சாதமிழனும் இன்று முழுநேர ஓய்வில் இருந்தனர்.
செனாவாங் சட்டமன்ற உறுப்பினர் பி.குணாவின் அலுவலகத்திலேயே தங்கி, ஓய்வெடுத்ததாக தியாகு நம்மிடம் தெரிவித்தார்.
‘தமிழ்ப்பள்ளிகள் காப்போம்! தமிழ்க்கல்வி மீட்போம்!!’ என்றக் கருப்பொருளோடு, கடந்த நவம்பர் 25-ல், ஜொகூர் துன் அமினா தமிழ்ப்பள்ளியில் இருந்து தொடங்கிய, இந்த நடைப்பயணம், டிசம்பர் 11-ம் நாள், காலை 9 மணியளவில், புத்ரா ஜெயா டத்தாரான் புத்ராவில் முடிவுறும்.
இந்த நடைப்பயணத்தின் நோக்கங்களைத் தியாகு நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
“முதல் நோக்கம் என்னவென்றால், தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவது. இன்று நாட்டில் பல தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவுகண்டு வருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், நம்மவர்களிடையே, தமிழ்க்கல்வியின்பால் குறைந்துவரும் ஆர்வம் ஒரு முக்கியக் காரணம் என நான் நம்புகிறேன். ஆக, தமிழ்க்கல்வியின் அவசியம் பற்றி நாம் மக்களிடையே பரப்புரை செய்யவேண்டிய நேரம் இதுவென்று நான் நினைக்கிறேன்,” என்றார் தியாகு.
“அடுத்தது, தமிழ்க்கல்வியின் நிலைத்தன்மையை உறுதி செய்தல். இந்நாட்டில், அடுத்த தலைமுறைக்காகத் தமிழ்க்கல்வி நிலைத்திருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டியக் காலம் இது. அன்று, ஐயா கோ.சாரங்கபாணி போன்றவர்களின் போராட்டத்தால், இன்று நான் தமிழ்வழிக் கல்வி கற்றேன். நாளை என் தலைமுறை தமிழ்வழிக்கற்க நான் என்னால் முடிந்ததைச் செய்துவிட்டுபோக விரும்புகிறேன்.”
“மூன்றாவது நோக்கம், தமிழ்ப்பள்ளிகளுக்கான முறையான கட்டமைப்பு, அதாவது அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் வாரியம் (எல்.பி.எஸ்.) உருவாக்கப்பட வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைவிட, தமிழ்ப்பள்ளிகளில் இந்த வாரியம் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என நான் நினைக்கிறேன்.
“காரணம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில், பள்ளியில் பயிலும் மாணவரின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே உறுப்பியம் பெற முடியும், ஆனால், வாரியத்தில் முன்னாள் மாணவர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் இணையலாம். இது ஒரு பள்ளி நிர்வாகத்திற்கு மேலும் வலுவைச் சேர்க்கும் என நான் நம்புகிறேன்,” என்று தியாகு தெரிவித்தார்.
“பள்ளி வாரியத்தின் வாயிலாக, அப்பள்ளி எதிர்நோக்கும் நிலம், நிதி, தளவாடப் பொருள்கள் என, இன்னும் பல பிரச்சனைகளைச் சுலபமாக கையாள முடியும்,” என்றும் தியாகு மேலும் கூறினார்.
ஆக, இன்று நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த, தாங்கள் இந்த 350 கிமீ நடைப்பயணத்தை மேற்கொண்டு வருவதாக தியாகு கூறினார்.
அப்பிரச்சனைகளில் முகான்மையாக, இன்று கருதப்படுவது தமிழ்ப்பள்ளிகளில் இருமொழி திட்டம். மக்கள் இன்னும் அதுபற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது அவர்களின் நடைப்பயணத்தின் போது கண்டறிந்ததாகவும் அவர் சொன்னார்.
ஆக, மக்களிடையே தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நீண்ட நடைப்பயணம் ஒரு கருவியாக அமைந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.
நாளை அதிகாலை, லாபு பட்டணத்தை நோக்கி அவர்களின் பயணம் தொடரும்.
மேல் விவரங்களுக்கு : – https://www.facebook.com/MotherTongueEducation/ முகநூல் பக்கம் செல்லவும்.
அவர்களைச் சந்திக்க விரும்பும் அன்பர்கள், 012 4341474 – தமிழ் இனியன் / 016 948 9218 – கௌதமன் என்ற எண்களில் அழைக்கலாம்.
- ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்