என்னை ஒழித்துக்கட்ட கட்சி அவசரம் காட்டுவது ஏன்? டிஏபியின் பிடிவாதக்கார பிரதிநிதி வினவல்

டிஏபியில்   தனிப்போக்கில்    செயல்படும்    தஞ்சோங்  பூங்கா    சட்டமன்ற   உறுப்பினரான   தே   ஈ  சியு,  மெளனம்   கலைந்து    கட்சி   தம்மை  ஒழித்துக்கட்ட    அவசரம்  காண்பிப்பதாகக்  குற்றம்  சாட்டியுள்ளார். தம் தொகுதி   மக்களுக்கு   வெள்ள   உதவிகள்   செய்வதற்குக்கூட    தாம்   அனுமதிக்கப்படவில்லை   என்றாரவர்.

தாம்  வேறு   எந்தக்   கட்சியிலும்  சேர்ந்து  விடவில்லை    என்றும்   இன்னமும்   டிஏபி  உறுப்பினன்தான்   அதன்  சட்டமன்றப்  பிரதிநிதிதான்  என்றும்   அவர்  சொன்னார்..

“உங்களுக்கு(டிஏபி   தலைவர்களுக்கு)ப்   பொறுமையாக    இருக்கத்   தெரியாதா?  என்னை  ஒழித்துக்கட்ட   நீங்கள்   அவசரப்படுவது  உங்கள்  மனப்போக்கைக்  காண்பிக்கிறது”, என  தே    தஞ்சோங்  பூங்காவில்  உள்ள   அவருடைய   சேவை  மையத்தில்    மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

மூத்த  டிஏபி   தலைவர்   ஒருவர்,   மாநில    செய்தி  மடலான   புல்லடின்   உத்தாராவில்   தம்மை  மட்டம்  தட்டி   எழுதியிருப்பதாக   தே   தெரிவித்தார்.

“எனக்குக்  கண்டனம்   தெரிவிக்கிறீர்கள்.  என்னைப்   பற்றித்   தவறாகக்  கூறுகிறீர்கள். என்னை  வைத்து   அரசியலா?

“நான்  ஆபத்தானவன்  என்கிறீர்கள்.  எந்த  வகையில்  ஆபத்தானவன்? ஏதாவது   சதித்திட்டத்தில்   ஈடுபடுவேன்  என்கிறீர்களா?

“சதி   செய்வதாக   இருந்தால்   கட்சியிலிருந்து  வெளியேறப்போவதாக   முன்கூட்டியே   அறிவித்திருக்க  மாட்டேனே”,  என்றாரவர்.

டிசம்பர்    14-இல்,  தே  வெள்ளத்தால்   பாதிக்கப்பட்டவர்களைப்  பதிவு   செய்யும்   பணியில்   ஈடுபடுவதற்கு  கட்சி   தடை   செய்தது. பதிவு  செய்யப்படுவோர்   மாநில   அரசின்  வெள்ள   உதவித்   திட்டத்திலிருந்து  ரிம700  நிதி உதவி  பெறத்   தகுதி   பெறுவர்.

தே  எதிர்மறையான    அறிக்கைகளை   வெளியிட்டு   வருகிறார்   என்றும்    அதனாலேயே   அவர்   வெள்ள  உதவிப்பணிகளில்     ஈடுபட   தடை  விதிக்கப்பட்டது   என்றும்   டிஏபி   புக்கிட்   பெண்டேரா   எம்பி   சைரில்   கீர்  ஜொஹாரி   கூறினார்.

“டிஏபி-இலிருந்து   வெளியேறப்போவதாக   பகிரங்கமாக   அறிவித்திருக்கிறார்.அதிலிருந்து   வெளியேறுகிறார்    என்றால்  அவர்  பக்கத்தான்  ஹரபான்  மாநில    அரசைவிட்டும்   விலகுவார்   என்றுதான்  பொருள்.  எனவே,  அவரது  நிலை  நிச்சமற்று  இருக்கிறது.  எதற்கு  வீண்  வம்பு”,  என்று  சைரில்    தெரிவித்ததாக   புல்லடின்  முத்தியாரா   கூறிற்று.

இப்போது   சைரில்தான்  தஞ்சோங்  பூங்காவில்  வெள்ள   அகதிகளுக்கு   உதவும்  பணிகளைச்   செய்து   வருகிறார்.