கேஎல்ஐஏ2 குறைந்த-விலை விமான நிலையம் அல்ல- எம்ஏஎச்பி

மலேசியன்  ஏர்போர்ட்ஸ்   ஹோல்டிங்ஸ்  பெர்ஹாட்(எம்ஏஎச்பி)கோலாலும்பூர்  அனைத்துலக  விமான  நிலையம்2 (கேஎல்ஐஏ2)    குறைந்த-விலை  விமான  நிலையம்  அல்ல  வென்பதை    வலியுறுத்துகிறது.

“குறைந்த-விலை  முனையம்   என்று  கூறிக்கொண்டு”  ஆசியானுக்கு   அப்பால்   செல்லும்   அனைத்துலகப்  பயணங்களுக்கான  பயணிகள்   சேவைக்  கட்டணம்(பிஎஸ்சி)   அதிகரிக்கப்பட்டிருப்பதைக்  குறைகூறிய    பெட்டாலிங்  ஜெயா    உத்தாரா   எம்பி   டோனி   புவாவுக்கு    அது   இவ்வாறு   பதிலளித்தது.

“கேஎல்ஐஏ2-இன்   கட்டுமான   செலவுகள்  மிகவும்  கூடிவிட்டது”   அதைச்   சரிக்கட்டவே   பிஎஸ்சி   உயர்த்தப்பட்டிருக்கிறது    என  புவா   கூறியிருந்தார்.

“2007-இல்   ரிம1.7 பில்லியன்  பட்ஜெட்டில்   அந்த  விமான  நிலையம்   கட்டி  முடிக்க  திட்டமிடப்பட்டது.  ஆனால்    கட்டுமானச்  செலவுகள்  எகிறி    ரிம4 பில்லியனைத்  தாண்டி  விட்டன.   குறித்த  காலத்துக்குள்   கட்டி  முடிக்கப்படாமல்     ஈராண்டுகள்  கழித்தே  கட்டி  முடிக்கப்பட்டது”,  என்றாரவர்.

அதற்கு   எதிர்வினையாற்றிய    எம்ஏஎச்பி,  ரிம  4பில்லியன்   கட்டுமானச்  செலவு  குறித்து    ஏற்கனவே  பல  தடவை   விளக்கமளித்திருப்பதாகக்   கூறிற்று.

“அரசாங்க   நிறுவனங்கள்,  ஏர் ஏசியா  போன்ற   நிறுவனங்களின்    தேவைகளையும்  கோரிக்கைகளையும்   ஏற்க   வேண்டியிருந்ததால்   செலவுகள்    அதிகரித்ததை   புவாவிடமும்   மற்ற  பிஏசி(பொதுக்  கணக்குக்  குழு)    உறுப்பினர்களிடமும்   பலமுறை  விளக்கியிருக்கிறோம்.

“விமான  நிலையத்தின்   கட்டுமானச்  செலவுக்கும்   பிஎஸ்சி  கட்டணத்துக்கும்   தொடர்பில்லை.  மற்ற   நாடுகளில்   பிஎஸ்சி -யுடன்      விமான  நிலைய   மேம்பாட்டுக்   கட்டணம்   என்ற  ஒன்றையும்  பயணிகள்   செலுத்த   வேண்டியிருக்கும்.  மலேசியாவில்   அப்படி   அல்ல.

“நமது  பிஎஸ்சி  கட்டணம்   இவ்வட்டாரத்திலும்   உலகிலும்    மிகக்  குறைவான  ஒன்று.

“கடந்த   பத்தாண்டுகளில்       மலேசியா  ஏர்போர்ட்ஸ்  நிறுவனத்தின்  நிதி  நிலைமை     வலுவாகவே   இருப்பதால்,   அதை   நொடித்துப்போகும்  நிலையிலிருந்து   மீட்டெடுக்கும்    அவசியம்   மலேசிய   அரசாங்கத்துக்கு   இதுவரை  ஏற்பட்டதில்லை”,  என்று   அது  கூறியது.

2017   மூன்றாம்   காலாண்டில்   வரிக்குப்  பிந்திய  ஆதாயமாக   ரிம79. 7மில்லியனை   பதிவு   செய்துள்ளதாகவும்   எம்ஏஎச்பி   கூறிக்கொண்டது.