பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பிப்ரவரி இறுதியில் நாடாளுமன்றத்தைக் கலைக்க மார்ச் அல்லது ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடைபெறலாம். சீனமொழி நாளேடான சின் சியு டெய்லியில் இப்படியொரு செய்தி வெளிவந்துள்ளது.
சிலாங்கூரில் தேர்தல் தொகுதி திருத்தங்கள்மீதான ஆட்சேபங்களை விசாரிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றத் தடையுத்தரவைத் தள்ளுபடி செய்யும் வழக்கில் தேர்தல் ஆணையம்(இசி) வெற்றிபெற்றுள்ளதை அடுத்து அவ்வாறு நடக்கலாம் என சில வட்டாரங்கள் தெரிவித்ததாக அச்செய்தி கூறிற்று.
அவ்விசாரணைகள் முடிவுற்றதும் எல்லா மாநிலங்களிலும் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கைகளும் தொகுக்கப்பட்டு நஜிப்பிடம் ஒப்படைக்கப்படும்.
ஜனவரியில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டமொன்று கூட்டப்பட்டு அதில் புதிய தேர்தல் தொகுதி எல்லைகள் ஏற்கப்படும்.
புதிய தேர்தல் தொகுதி எல்லைகள் மீதான விசாரணை சிலாங்கூரில் மட்டும்தான் இன்னும் நடக்கவில்லை.
சிலாங்கூர் மாநிலம் , இசி தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைத்ததைச் செல்லாது என்று அறிவிக்கக் கோரி 2016-இல் வழக்கு தொடர்ந்தது.
கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் டிசம்பர் 7-இல் சிலாங்கூர் அரசின் வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஆனால், தொகுதிச் சீரமைப்பு தொடர்பான இசியின் விசாரணையை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது.
இப்போது அந்தத் தடையும் அகன்று விட்டது.
நடப்பு நாடாளுமன்றம் ஜூன் 24வரைதான் செயல்பட முடியும். அதன்பின் அது தானாகவே செயலிழந்து விடும். ஆனால், தேர்தல்கள் மே 27க்குப் பிறகு நடக்க வாய்ப்பில்லை என்று அச்செய்தி கூறியது, ஏனென்றால் அதன் பின்னர் ரமலான் தொடங்கி விடும்.
“இன்னொன்றும் கவனத்தில் கொள்ள வேண்டும்………பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் ஜூன் 9-இல் விடுவிக்கப்படுவார்.
“அன்வார் விடுதலை செய்யப்படுவதற்காக பிஎன் காத்திருக்காது எனக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்”,என அச்செய்தி கூறிற்று.
சில அரசியல் பார்வையாளர்கள், ஏப்ரல் 3-உடன் நஜிப் பிரதமராகி ஒன்பது ஆண்டுகள் நிறைவு பெறும் என்பதால் அதன் பிறகு நஜிப் தேர்தலை வைத்துக்கொள்ளக்கூடும் என்று கருதுகிறார்கள்.
“அது ஒன்பது ஆண்டுகளில் நாட்டுக்குத் தம்முடைய பங்களிப்பை எடுத்துரைக்க ஒரு வாய்ப்பாக அமையும் என்றவர்கள் நினைக்கிறார்கள்”, என்று அச்செய்தி கூறியது.