‘சாபா எதிரணியின் பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளை மதிப்பதில்லை’

சாபா  எதிர்க்கட்சிகளின்   கூட்டணியான   காபோங்கான்   சாபா,  பக்கத்தான்  ஹரபானுடனும்   பார்டி   வாரிசான்   சாபா(வாரிசான்)வுடனும்   தேர்தல்   கூட்டு  வைத்துக்கொள்வதற்கு   அரும்பாடு  படுகிறது. ஆனால்,   அவை  இரண்டும்  பிடி  கொடுக்காமல்    இழுத்தடிக்கின்றன.

மலேசிய  மாநிலங்களில்  சாபாவில்தான்   எதிர்க்கட்சிகள்  அதிகமாக  பிரிந்து  கிடக்கின்றன. 60பேரைக்  கொண்ட   சாபா   சட்டமன்றத்தில்  ஐந்து   எதிர்க்கட்சிகள்,  நான்கு  சுயேச்சைகள்.

காபோங்கான்  சாபா,   தேர்தலுக்கு  முன்  பிஎன்னுக்கு   எதிராக   எதிர்க்கட்சிகளின்   கூட்டணியை   அமைக்க  ஆர்வம்  காட்டுகிறது.  ஆளும்  கட்சிக்கான  ஆதரவு   குறைந்து     வருவது   அதன்    ஆர்வத்தை  மேலும்  தூண்டிவிட்டுள்ளது. பிஎன்  2008  தேர்தலில்  ஒரே  ஓர்  இடத்தைத்   தவிர   மற்ற   எல்லா  இடங்களையும்  வென்றது. 2013-இல்  48  இடங்களில்  மட்டுமே   அது  வெற்றி  பெற்றது.  அதற்குக்  கிடைத்த   வாக்குகளின்   எண்ணிக்கையும்  குறைந்தது. 55 விழுக்காடு  வாக்குகள்தான்   கிடைத்தன.

சாபாவில்  பிஎன் ஒன்றும்  அசைக்க  முடியாத  கட்சியாக   இருந்தது  இல்லை.  ஆனால்,   எதிர்க்கட்சிகள்   ஒன்றுபட்டாலொழிய   பிஎன்னை  ஆட்சியிலிருந்து  இறக்குவது   கடினம்  என  காபோங்கான்   தலைவர்கள்  நினைக்கிறார்கள்.

ஸ்டேட்   ரிபோர்ம்   கட்சி (ஸ்டார்),  பார்டி   ஹரபான்  ராக்யாட்  சாபா( பிஎச்ஆர்எஸ்)  பார்டி   பெர்பாடுவான்  ரக்யாட்  சாபா(பிபிஆர்எஸ்),  சாபா  முற்போக்குக்  கட்சி(எஸ்ஏபிபி)   அகிய  கட்சிகளைக்  கொண்ட      காபோங்கான்  சாபாவுக்கு   சட்டமன்றத்தில்   இரண்டு   இடங்கள்தான்  உள்ளன. அந்த   வகையில்   அதற்குப்  பேரம்  பேசும்  வலு  இல்லை.

இதனால்தான்    வாரிசானுடன்   பேச்சு   நடத்த   காபோங்கான்  சாபா   மிகவும்  முயன்றாலும்கூட   வாரிசான்  அதை  மதிக்காமல்  நடந்துகொள்கிறது   என்று  எஸ்ஏபிபி   தலைவர்   யோங்  டெக்  லீ   கூறினார்.

“வாரிசான்  தன்  பலத்தைப்   பெரிதாக  நினைத்து  வீரதீரப்   பேச்சு  பேசுகிறது.  அவர்கள்   தங்கள்மீது   அளவுமீறிய  நம்பிக்கை    நம்பிக்கை  வைத்திருக்கிறார்கள்.  ஆனால்,  அவர்கள்  இதுவரை  பிஎன்னின்  வலிமையைக்  கண்டதில்லை.

“வாரிசான்   தலைவர்கள்  எல்லாருமே  டிஏபி,  பிகேஆர்,  அம்னோ    ஆகிய  கட்சிகளிலிருந்து  வந்தவர்கள்.  அவர்களில்   யாரும்   இதற்குமுன்  அம்னோவுடன்   மோதியதில்லை”,  என்றார்  யோங்.  யோங்  முன்பு  சாபா  முதலமைச்சராக   இருந்தவர்.

அவருடைய  எஸ்ஏபிபி  கட்சி   2008-இல்   பிஎன்னிலிருந்து  விலகியது.  2013-இல்  யாருடனும்   தேர்தல்  கூட்டு   வைத்துக்கொள்ளாததால்   எஸ்ஏபிபி    வேட்பாளர்கள்  படுதோல்வி    அடைந்தனர். யோங்குக்கே   அவர்  1985-இலிருந்து   2002வரை  பிரதிநிதித்த   லிக்காஸ்   தொகுதியில்  9.7 விழுக்காட்டு  வாக்குகள்தான்   கிடைத்தன.

இதனிடையே   ஸ்டார்  தலைவர்    ஜெப்ரி   கிட்டிங்கான்,   வாரிசான்  தலைவர்கள்   காபோங்கான்  சாபா   தலைவர்களைத்   தங்களுக்கு  ஒப்பானவர்களாக  நினைப்பதே  இல்லை   என்றார்.

“ஹரபான்  பரவாயில்லை.  நாங்கள்  இருவரும்  பேசிக்கொள்கிறோம்.  வாரிசானிடம்   இறுமாப்பு   அதிகம்.  எங்களுடன்  பேச  அவர்கள்  விரும்புவதில்லை”,  என்றார்.

காபோங்கான்  சாபா   வாரிசானுக்குக்   கடிதமும்  எழுதியுள்ளது.  அதனிடமிருந்து  முறையான  பதில்  எல்லை.  ஆனால்,  இருக்கும்  நிலவரங்களைப்   பார்த்தால்   வாரிசான்   தேர்தலில்   தனித்துப்  போட்டியிட   விரும்புவதுபோல்தான்   தெரிகிறது.

“இனியும்   அவர்களிடம்  வலிய  போய்ப்   பேசிக்  கொண்டிருக்க   முடியாது.   நாங்கள்  முயன்று  பார்த்து   விட்டோம்.  இனி,  அவர்கள்தான்  சொல்ல  வேண்டும்”  என  கிட்டிங்கான்

வாரிசான்   தலைவர்களைத்   தொடர்பு  கொண்டதற்கு   அவர்களில்   யாரும்  காபோங்கான்   சாபாவுடன்  தேர்தல்  கூட்டு  அமைப்பது   குறித்து  பேசுவதற்கு  விருப்பம்    காட்டவில்லை.

வாரிசான்  தலைவர்கள்   உதாசீனப்படுத்தினாலும்   அவர்கள்   தங்களுக்கு  நன்கு   அறிமுகமானவர்கள்   என்பதால்    அவர்களுடன்   உறவுகளை  வளர்த்துக்கொள்ள   முடியும்   என்றே  யோங்   கருதுகிறார்.

“ஹரபானைப்  பொறுத்தவரை   எல்லாம்  குழப்பமாகவே  உள்ளது.  அவர்களில்    யாருடன்   பேசுவது   என்பதுகூட   தெரிவதில்லை.

“முடிவெடுக்கும்   அதிகாரம்   இங்குள்ள    ஹரபான்  தலைவர்களுக்கு    இருப்பதாக    தெரியவில்லை”,  என்றாரவர்.

வாரிசான்  ஹரபானுடன்   பேச்சு  நடத்த   பல  தடவை   முயன்றுள்ளது.  ஆனால்,  ஹரபான்   அதன்  பங்காளிக்கட்சிகளிடையே  இடஒதுக்கீட்டு   விவகாரத்தில்   தீவிரமாக   ஈடுபட்டிருப்பதுபோல்    தெரிவதாக    தகவலறிந்த   வட்டாரங்கள்   தெரிவித்தன.