பாஸ் மறுத்தாலும் ஹாடியின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது: மசீச சாடல்

பாஸ்   தலைவர்    அப்துல்   ஹாடி   ஆவாங்   தாம்    அமைக்கும்   அமைச்சரவை  எப்படி   இருக்கும்   என்று   விளக்கி   அண்மையில்  வெளியிட்ட  அறிக்கை   அவர்  முஸ்லிம்- அல்லாதாரிடம்  பாகுபாடு  காட்டுவதை  வெட்ட  வெளிச்சமாக்கியுள்ளது   என  மசீச   தலைவர்  ஒருவர்  கூறினார்.

அமைச்சரவையில்    முஸ்லிம்-அல்லாதார்    “kepakaran dan pengurusan” (நிபுணத்துவ,  நிர்வாக)  பணிகளுக்கு  மட்டுமே  தகுதியானவர்கள்   என்று   ஹாடி  குறிப்பிடுவதாக  மசீச  சமய  நல்லிணக்கப்  பிரிவுத்  தலைவர்   டி  லியான்  கெர்  கூறினார்.

அதே   வேளை   கொள்கை,  கோட்பாடுகள்  வகுக்கும்  பணிகளை  முஸ்லிம்  அமைச்சர்கள்  மட்டுமே  செய்ய  வேண்டும்  என்பது   ஹாடியின்  கருத்து.

“கொள்கை  வகுப்பதில்  ஈடுபடக்கூடாது   எனக்  கட்டுப்படுத்தி    பாஸ்    தலைவரும்     அவருடைய    கட்சியும்  முஸ்லிம்- அல்லாதாருக்கு   எதிராக    பாகுபாடு  காட்டுவது  ஏன்? நியாயமாக    நடந்துகொள்வதாக  கூறிக்கொள்கிறார்களே,  இதுதான்  பாஸ்   தலைவர்களின்  நியாயமா?”,  என்று  டி  ஓர்   அறிக்கையில்   சாடினார்.

இந்நாட்டில்  முஸ்லிம்கள்தான்   பெரும்பகுதி  என்பதால்  அமைச்சரவை  முஸ்லிம்களை  மட்டுமே   கொண்டிருக்க   வேண்டும்  என்று   ஹாடி   டிசம்பர்  23-இல்   அறிக்கை  ஒன்றை  வெளியிட்டு   பலரின்  கண்டனத்துக்கு   இலக்கானார்.