பிரதமர் வேட்பாளர் தொடர்பில் அனைத்துத் தரப்புடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதே அன்வாரின் விருப்பம்- பிகேஆர்

எதிரணி  பிரதமர்  வேட்பாளராக   அன்வார்  இப்ராகிமின்  பெயர்  அடிக்கடி  குறிப்பிடப்பட்டாலும்,   அவரைப்  பொருத்தவரை  அவ்விசயத்தில்   பிகேஆர்  தலைமைத்துவம்   பொதுமக்கள்  உள்பட   அனைத்துத்   தரப்பினரிடம்  கலந்து  பேசி  முடிவெடுப்பதையே  விரும்புகிறாராம்.

பிகேஆர்  தொடர்பு  இயக்குனர்   ஃபாஹ்மி  ஃபாட்சில்   இதனைத்   தெரிவித்தார். டாக்டர்  மகாதிர்  முகம்மட்டைப்  பிரதமர்   வேட்பாளராகவும்    டாக்டர்   வான்  அசிசா  வான்  இஸ்மாயிலைத்   துணைப்  பிரதமர்   வேட்பாளராகவும்   பக்கத்தான்   ஹரபான்  பரிந்துரைத்திருப்பதாக   மலேசியாகினியில்   வெளிவந்த    செய்தி   குறித்துக்  கருத்துரைத்தபோது    அவர்  இவ்வாறு  கூறினார்.

“இடைக்கால  பிரதமர்   விவகாரம்  குறித்து  ஏற்கனவே   விவாதித்திருக்கிறோம். இப்போது  அப்பதவிக்கு   மகாதிர்  பெயர்  குறிப்பிடப்பட்டுள்ளது”,  என ஃபாஹ்மி  ஓர்   அறிக்கையில்   கூறினார்.

பிகேஆர்  அரசியல்  பிரிவு   ஒரு  நிபந்தனையுடன்  டாக்டர்  எம்-  வான்  அசிசா  கூட்டை  ஏற்றுக்கொண்டிருப்பதாக   சில  வட்டாரங்கள்   தெரிவித்தன.  மகாதிர்  அன்வாரின்  விடுதலைக்காக  பாடுபட்டு   அவர்  வெளிவந்ததும்   அவரிடம்  பொறுப்பை  ஒப்படைக்க  வேண்டும்   என்பதுதான்  நிபந்தனை.

“அன்வார்   வந்து  பதவிப் பொறுப்பை   ஏற்கும்வரை  இடைக்காலப்   பிரதமராக  மட்டுமே  இருக்கப்போவதாக   (மகாதிர்)  வாக்குறுதி  அளிக்க    வேண்டும்”,  என்று  அவ்வட்டாரங்கள்   கூறின.

டிசம்பர்  19-இல்  பிகேஆரின்  அரசியல்  பிரிவுக்   கூட்டத்தில்  இம்முடிவெடுக்கப்பட்டது.   இதை   அன்வாரும்  ஏற்றுக்கொண்டிருப்பதாகக்  கூறப்பட்டுகிறது.