அன்வார் குடும்பத்தினருக்குப் புதுத் தொகுதிகளா?

பிகேஆர்  உதவித்   தலைவர்   நுருல்  இஸ்ஸா  அன்வார்,   எதிர்வரும்   பொதுத்  தேர்தலில்  பெர்மாத்தாங்   பாவிலும்   இப்போது  பெர்மாத்தாங்  பாவ்  எம்பியாகவுள்ள   டாக்டர்   வான்  அசிசா   வான்  இஸ்மாயில்   கிள்ளான்   பள்ளத்தாக்கிலும்   போட்டியிடுவார்கள்   எனத்   தெரிகிறது.

இரண்டு    தவணைகள்   லெம்பா   பந்தாயில்    போட்டியிட்ட   நுருல்  இஸ்ஸா  இம்முறை   அங்கு  போட்டியிட   மாட்டார்  என  பல  வட்டாரங்கள்   மலேசியாகினியிடம்   தெரிவித்தன.  அத்தொகுதியில்   வாக்காளர்   எண்ணிக்கையை   உயர்த்த   சூழ்ச்சிகள்  நடந்துள்ளதாக  அவை   தெரிவித்தன.

2013  தேர்தலுக்குப்  பின்னர்  போலீஸ்  படையைச்  சேர்ந்த   6598  பேர்   லெம்பா   பந்தாய்   தொகுதியின்    புதிய   வாக்காளர்களாக   சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்களாம்.  ஒரு  வட்டாரம்   தெரிவித்தது.

இன்னொரு    வட்டாரம்,   “செகாம்புட்டிலிருந்து 7,000  வாக்காளர்கள்  வருவதால்  அவருடைய   வெற்றிவாய்ப்பு  குறைந்துள்ளது.  இந்நிலையில்   அவரை   லெம்பா  பந்தாயில்  களமிறக்குவது    அறிவுடைமையாகாது.  மத்திய   தலைவர்   ஒருவரை   ஆபத்தான  தொகுதியில்  களமிறக்க   கட்சி   நிச்சயம்  விரும்பாது”,  என்று     குறிப்பிட்டது.

கடந்த   தேர்தலில்   நுருல்  இஸ்ஸா  குறுகிய  பெரும்பான்மையில்தான் -1874  வாக்குகளில்தான் –  பிஎன்  வேட்பாளர்   ராஜா  நொங்  சிக்கைத்   தோற்கடித்தார்.

நுருல்  இஸ்ஸா  எங்கு   போட்டியிடுவார்  என்பதைத்    தெரிவிக்கவில்லை  ஆனால்   சமூக  வலைத்தளங்களில்     பெனாந்தி   தொகுதியில்   அவர்  வீடு-வீடாகச்  சென்று  மக்களைச்    சந்திக்கும்  படங்கள்  நிறைய   பதிவேற்றம்  செய்யப்பட்டுள்ளன.

பெனாந்தி,    பெர்மாத்தாங்  பாவ்  தொகுதியில்  உள்ள  ஒரு  மாநிலச்   சட்டமன்றத்  தொகுதியாகும்.

வான்  அசிசாவைப்  பொருத்தவரை   அவர்  கிள்ளான்  பள்ளத்தாக்கில்தான்  களமிறங்குவதையே  பிகேஆர்  விரும்புவதாக   ஒரு   வட்டாரம்   கூறியது.

“அவரது  வயதில்  பெர்மாத்தாங்  பாவுக்கும்   கோலாலும்பூருக்கும்  அடிக்கடி  பயணம்  செய்வது  அலைச்சல்  மிக்கதாகும்”,  என்று  கூறிய  அவ்வட்டாரம்   அவர்  பாண்டானில்   அல்லது  பண்டார்   துன்  ரசாக்கில்   நிறுத்தப்படலாம்   என்றது.

கட்சித்  தலைவர்   காஜாங்  சட்டமன்ற  உறுப்பினருமாவார்.  அத்தொகுதியைத்  தக்க  வைத்துக்கொள்ள    அவர்  விரும்புகிறாரா  என்பது   தெரியவில்லை.

இதனிடையே,  லெம்பா  பந்தாயில்   நுருலின்  முன்னாள்   அரசியல்   செயலாளரும்   பிகேஆர்   தொடர்பு   இயக்குனருமான    ஃபாஹ்மி  ஃபாட்சில்   களமிறக்கப்படலாம்    என எதிர்பார்க்கப்படுகிறது.

36-வயது  நிரம்பிய    அவர்  பல   தடவை   அத்தொகுதியில்   நுருல்  இஸ்ஸாவுடன்   காணப்பட்டிருக்கிறார்.