போலிஸ் : பிஜே தேவாலயத்தின் மீதான ‘நீர் குண்டுவீச்சு’ தாக்குதல் நாசவேலை அல்ல

இன்று நள்ளிரவு, பெட்டாலிங் ஜெயா தேவாலயத்தின் மீதான் ‘நீர் குண்டுவீச்சு’ தாக்குதலில் மூவர் காயமடைந்தனர்.

பெட்டாலிங் ஜெயாவிலுள்ள லூதர் செண்டர் தேவாலயத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்திற்குக் காரணம் ஒரு ‘மாட் ரெம்பிட்’ குழு என்று நம்பப்படுவதாக பெட்டாலிங் ஜெயா போலிஸ் தலைவர் முகமட் ஷானி சே டின் தெரிவித்தார்.

எனினும். இது அந்தத் தேவாலயத்திற்கு எதிரான நாசவேலை என்பதை அவர் மறுத்தார்.

“இச்சம்பவம் மத எதிர்ப்பின் காரணமாக நிகழ்ந்தது அல்ல,” என்று ஓர் ஊடக அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு சுமார் 12.45 வாக்கில், புத்தாண்டு இறைவணக்கத்திற்குப் பிறகு, மக்கள் தேவாலயத்தை விட்டு வெளியேறியபோது, குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாக தேவாலயத்தின் பாதிரியார் தெரிவித்ததாக முகமட் ஷானி கூறியுள்ளார்.

“நீர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்னர், சில பஞ்சாபியர் மற்றும் ஒரு மலாய்க்காரக் குழுவினருக்கு இடையே ஒரு துரத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“மேலும், இச்சம்பவம் லூதர் செண்டர் தேவாலயத்தின் மீதான நாசவேலை அல்ல என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இது மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு இடையிலான தகராறு, தேவாலயத்தின் முன் நடந்துள்ளது. அவர்கள் வீசியெறிந்த பட்டாசில் ஒன்று சாலையிலும் இன்னொன்று தேவாலயத்தின் நுழைவாயிலிலும் விழுந்து வெடித்துள்ளது.”

இச்சம்பவம் குறித்த விவரம் அறிந்த பொதுமக்கள், 03 9766 2222 என்ற எண்களில், பெட்டாலிங் ஜெயா போலிஸ் தலைமையகத்தைத் தொடர்புகொள்ளுமாறு முகமட் ஷானி கேட்டுக்கொண்டார்.