சிலாங்கூர் பாஸ் செயலவையில் ‘மாநில அரசுக்கு நெருக்கமாகவுள்ள’ கைருடினுக்கு இடமில்லை

சிலாங்கூர்  பாஸ்  கட்சியின்   செயலவையிலிருந்து  நீக்கப்பட்டுள்ள  பாயா  ஜராஸ்   சட்டமன்ற   உறுப்பினர்  கைருடின்   ஒத்மான்   தாம்   மாநில   அரசுக்கு   “நெருக்கமாக”  இருப்பதை   ஒப்புக்கொண்டார்.

“மாநில   ஆட்சிக்குழுவில்   இடம்பெற்றிருப்பதால்  சிலாங்கூர்  அரசுடன்  நெருக்கமாக  உள்ளேன்.  அதை  மறுக்கவில்லை.

“சிலாங்கூர்  அரசைத்   தக்க  வைத்துக்கொள்ள    வேண்டும்  என்பதே  என்னுடைய   கருத்து.   இல்லை,   அடுத்த   பொதுத்   தேர்தலில்  மும்முனைப்  போட்டிதான்   என்றால்   அது  சிலாங்கூரை    பிஎன்னிடம்  ஒப்படைப்பதாக  அமைந்துவிடும்.

“இது  2008இலும்  2013இலும்  மக்கள்  கொடுத்த   அதிகாரம்தானே?  சொல்லப்போனால்,  மற்ற    மாநிலங்களோடு  ஒப்பிடும்போது   மந்திரி  புசாரும்   ஆட்சிக்குழுவினரும்   எங்கள்   அரசு  நேர்மையான   அரசு  என்பதை  நிரூபித்திருக்கிறார்கள்”,  என்றவர்  சினார்  ஹரியானிடம்   தெரிவித்தார்.

இரண்டு  மாதங்களுக்கு  முன்பே  தாம்   செயலவையிலிருந்து  நீக்கப்பட்டதாக  கைருடின்  கூறினார்.

“இப்போது  அவ்விவகாரத்தை   எழுப்புவது   வியப்பளிக்கிறது. நான்  இன்னமும்  பாஸில்தான்  இருக்கிறேன்.

“என்  சேவை  தேவையா  இல்லையா   என்பதை  சிலாங்கூர்  பாஸ்    தலைமைதான்  முடிவு   செய்ய   வேண்டும்”,  என்றார்.

2013  பொதுத்  தேர்தலில்  பாஸ்  15  சட்டமன்ற   இடங்களை  வென்றது.  15பேரில்  இருவர்  பாஸிலிருந்து  பிரிந்து  சென்ற   அமனா  கட்சிக்கு  மாறிச்  சென்று  விட்டனர்.

சிலாங்கூரில்  பிகேஆர்   துணைத்   தலைவர்   அஸ்மின்  அலியின்   தலைமையிலான    ஆட்சிக்குழுவில்  பாஸ்  கட்சியைச்  சேர்ந்த  மூவர்  இடம்பெற்றுள்ளனர்.

பாஸ்  அதிகாரப்பூர்வமாக  பிகேஆருடன்  உறவுகளைத்   துண்டித்துக்கொண்டுள்ளது.  ஆனால், சிலாங்கூரில்  மட்டும்  அது  பிகேஆருடன்   ஒத்துழைத்து   வருகிறது.